இந்தியா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மணிப்பூரில் போராட்டம் நடத்த தடை

DIN


மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பால் நகரின் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த 144 தடையுத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. 
மாநிலங்களவையில், செவ்வாய்க்கிழமை குடியுரிமை சட்டத் திருத்த  மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் உள்ள இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு  மாவட்டங்களில் தொடர் போராட்டங்களும், காலவரையற்ற கடையடைப்பு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த இரு மாவட்டங்களிலும் திங்கள்கிழமை இரவு முதல் 144 தடையுத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதையொட்டி, அப்பகுதிகளில் செல்லிடப்பேசியின் இணையதளச் சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் ஆகியோரின் இல்லங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.     
முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வணிக, வர்த்தக நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. 
தடையுத்தரவு குறித்து போலீஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. தடையுத்தரவு அமலில் உள்ளது குறித்து காவல்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தபடி சென்றதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கொண்டனர். 
வட கிழக்கு மாநில மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி 8-ஆம் தேதி மக்களவையில் மத்திய அரசால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அமலுக்கு வந்தால் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து 6 ஆண்டுகளான சிறுபான்மையின மக்கள் எவ்வித ஆவணங்களும் இன்றி இருந்தால் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்த மசோதாவை வட கிழக்கு மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
முன்னதாக இம்மசோதாவை கண்டித்து மணிப்பூர் மக்கள் கூட்டணி (பிஏஎம்) சார்பில் ஜிரிபம் மாவட்டத்தில் 36 மணி நேரம் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு கடந்த திங்கள்கிழமை காலை 5 மணி வரையிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT