முகப்பு
இந்தியா

பிகானீர் நில முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 2-ஆவது நாளாக ஆஜர்

ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நில ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்காக அமலாக்கத் துறை

Updated On : 14 பிப்ரவரி 2019, 1:14 am IST
பகிர்:


ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நில ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்காக அமலாக்கத் துறை முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தொடர்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமை ஆஜராகினார்.
ஜெய்ப்பூரின் பவானி சிங் சாலையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை காலை பத்தரை மணியளவில் வதேரா ஆஜரானார். முன்னதாக, இந்த வழக்கில்  ராபர்ட் வதேராவும், அவரது தாயார் மௌரீனும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணை தொடங்கி சில மணி நேரத்துக்கு பின்னர் வதேராவின் தாயார் அனுப்பப்பட்டார். வதேராவிடம் மட்டும் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.   ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியையொட்டி அமைந்துள்ள நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அந்த பகுதியின் வட்டாட்சியர் புகார் அளித்ததையடுத்து, அதுகுறித்து ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணையின்போது, அதில் வதேராவுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. அந்த வழக்கில் மாநில காவல் துறையினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.
அதனடிப்படையில், ராபர்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வதேரா மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், வதேராவும், அவரது தாயாரும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. முன்னதாக, இந்த வழக்கில் வதேராவுக்கு அமலாக்கத் துறை 3 முறை அழைப்பாணை அனுப்பியது. ஆனால், அவர் மூன்று முறையும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். அதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஆஜராகினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.