முகப்பு
இந்தியா

புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதி யார்? முன்கூட்டியே பதிவு செய்த விடியோ வெளியானது

புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதியின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுபோன்ற கொடூர தாக்குதல் நடத்துவது குறித்து அவன் பேசி பதிவிட்ட விடியோவும் வெளியாகியுள்ளது.

Updated On : 15 பிப்ரவரி, 2019 at 11:08 AM
பகிர்:


ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதியின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுபோன்ற கொடூர தாக்குதல் நடத்துவது குறித்து அவன் பேசி பதிவிட்ட விடியோவும் வெளியாகியுள்ளது.

தெற்கு காஷ்மீரான ககபோரா பகுதியைச் சேர்ந்த அடில் அகமது, 12வது மட்டுமே படித்தவர். இவரும், இவரது இரண்டு உறவினர்களும், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ஷ்-இ-மொஹம்மது இயக்கத்தில் இணைந்தனர்.

பிறகு, இவரது உறவினர் மட்டும் பயங்கரவாத இயக்கத்தை விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில், மற்ற இருவரும் பயங்கரவாத இயக்கத்திலேயே நீடித்தனர்.

Advertisement

பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்கு முன்பு, மேசனாக இருந்த அடில் அகமது உள்ளூர் மசூதிகளில் மக்களைத் திரட்டி தொழுகைகளை நடத்தி வந்துள்ளார்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் விடியோவை ஜெய்ஷ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில், பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து ஓராண்டாகிறது, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தக் காத்துக் கொண்டிருப்பதாகவும், இந்த விடியோ வெளியாகும் போது அதுபோன்றதொரு தாக்குதலை நடத்தி முடித்திருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் பலியாகினர். வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மிக சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஓட்டி வந்து, பேருந்து ஒன்றின் மீது மோதி வெடிக்கச் செய்தான்.  இதில் அந்தப் பேருந்து உருக்குலைந்தது. வீரர்கள் பயணம் செய்த வேறு சில பேருந்துகளும் பாதிப்படைந்தன.

இந்தக் கொடிய தாக்குதலில் 43 வீரர்கள் பலியாகினர். காயமடைந்த 36 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்துக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முஹம்மது ஹஸன் சார்பில், ஜிஎன்எஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த அமைப்பு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கமாகும். அதே சமயத்தில், அந்த இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டில் இணைந்த, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவரான அடில் அஹமது என்ற பயங்கரவாதியே இத்தாக்குதலை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் 350 கிலோ வெடிபொருள் இருந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.