இந்தியா

பாகிஸ்தானின் வர்த்தக கூட்டு நாடு அந்தஸ்து ரத்து : இந்தியா அதிரடி நடவடிக்கை

DIN


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு என்ற அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. 
புல்வாமா தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் தூண்டுதல் இருப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் பேருந்தின் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். இதில், 40 வீரர்கள் பலியாகினர்.
இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்தியாவும், பாகிஸ்தானும் உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ.) உறுப்பு நாடுகள் என்ற அடிப்படையில், வர்த்தக நடவடிக்கைகளை சுலபமாக மேற்கொள்வதற்காக வர்த்தக கூட்டு நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு கடந்த 1996-ஆம் ஆண்டில் இந்தியா வழங்கியது. தற்போது அது ரத்தாகியுள்ளது.
அமைச்சரவை ஆலோசனை: முன்னதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தானுக்கான வர்த்தக கூட்டு நாடு என்ற அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்துவது தொடர்பாக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும். 
இந்த பயங்கரமான தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் நேரடி தூண்டுதல் உள்ளது என்பதை மறுக்கஇயலாத ஆதாரங்கள் உள்ளன.
பயங்கரவாத வரையறை ஏற்கப்பட வேண்டும்: சர்வதேச அளவில் பயங்கரவாதிகளை வரையறை செய்வதற்கான வரைவு தீர்மானத்தை ஐ.நா.வில் கடந்த 1986-இல் இந்தியா தாக்கல் செய்தது. ஆனால், பயங்கரவாதத்தை வரையறை செய்வதில் கருத்தொற்றுமை இல்லாத காரணத்தினால் கடந்த 33 ஆண்டுகளாக அது அமல்படுத்தப்படாமல் உள்ளது. இந்தத் தீர்மானத்தை அமலுக்கு கொண்டு வருவது தொடர்பாக அனைத்து நாடுகளுடனும் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்றார் ஜேட்லி.
இறக்குமதி வரி உயரும்: பாகிஸ்தானுக்கான வர்த்தக கூட்டு நாடு தகுதி ரத்து செய்யப்பட்டிருப்பதை,  உலக வர்த்தக அமைப்புக்கு விரைவில் தெரியப்படுத்தும் நடவடிக்கையை மத்திய வர்த்தக நலத்துறை அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது.  இதையடுத்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான சுங்க வரியை தங்குதடையின்றி இந்தியா அதிகரித்துக் கொள்ளலாம். அந்தப் பொருள்களை, வர்த்தக நலத்துறை அமைச்சகம் பட்டியலிட்டு வருகிறது.
வீரர்களுக்கு ஸ்ரீநகரில் அஞ்சலி:  பயங்கரவாதத் தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு ஸ்ரீநகரில்,  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் ஆர்.ஆர்.பட்நாகர் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக, வீரர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது, அவற்றில் ஒரு பெட்டியை ராஜ்நாத் சிங்கும் சுமந்து சென்றார். பின்னர், பாதுகாப்பு நிலவரம் குறித்து அவர் ஆய்வு நடத்தினார்.

பாக். தூதரிடம் கண்டனம்
புல்வாமா தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமதுவை நேரில் அழைத்து வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் விஜய் கோகலே கண்டனம் தெரிவித்தார். 
தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-ஏ-முகம்மது பயங்கரவாத அமைப்புக்கு எதிராக உடனடியான, உறுதிமிக்க நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு முன்னெடுக்க வேண்டும். பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மற்றும் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அந்நாட்டுத் தூதரிடம், விஜய் கோகலே வலியுறுத்தினார். 
அதே சமயம், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் அஜய் பிஸாரியாவுடன், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் எண்ணத்துடன், அவரை உடனடியாக இந்தியா வருமாறு மத்திய அரசு அழைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்  
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கும் வகையில் தில்லியில் சனிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மத்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, அனைத்து பிரதான அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், அதைத் தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது என்றனர். 
முன்னதாக, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.

சர்வதேச நாடுகளிடம் முறையீடு    
பயங்கரவாதத்தை அரசின் ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பாகிஸ்தானுக்கு உள்ள பங்கு குறித்து, இந்தியாவில் உள்ள 25 நாடுகளின் தூதர்களைச் சந்தித்து, வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் விஜய் கோகலே விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்களிடம் விஜய் கோகலே முறையிட்டார்.

புல்வாமா தாக்குதல்: 7 பேரிடம் விசாரணை
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரை பிடித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழக்கக் காரணமான கொடூர தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப் படை பயங்கரவாதி, புல்வாமாவின் ககாபோரா பகுதியைச் சேர்ந்த அடில் அகமது என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.  
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணை தகவல்களின்படி, தாக்குதலுக்கான சதித் திட்டம் தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியிலுள்ள மிடூரா என்ற இடத்தில் தீட்டப்பட்டுள்ளது. 
இத்திட்டத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த 7 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியும், பாகிஸ்தானைச் சேர்ந்தவருமான கம்ரன் என்பவர்தான், இத்தாக்குதலுக்கான ஒட்டுமொத்த திட்டத்தையும் தீட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 
இதுதவிர, வெடிபொருள் ஏற்பாடு செய்ததில் முக்கிய நபராக சந்தேகிக்கப்படும் புல்வாமாவைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது ஆதரவாளர் ஒருவரையும் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT