இந்தியா

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர் குரு உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

DIN

ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குருவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
 ஜம்மு-காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற பேருந்தின் மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதிகள் மோதச் செய்ததில் 40 வீரர்கள் பலியாயினர்.
 இச் சம்பவத்தில் கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தின் குடிகெரே கிராமத்தைச் சேர்ந்த வீரர் எச்.குரு (33) உயிரிழந்தார். அவரது உடல் தில்லியில் இருந்து சனிக்கிழமை விமானத்தில் பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டது. பெங்களூரு, எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட குருவின் உடலுக்கு முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், மத்திய அமைச்சர் சதானந்த கெüடா, பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே உள்ளிட்ட ஏராளமானோர் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
 வழிநெடுக மக்கள் அஞ்சலி: இதைத் தொடர்ந்து, குருவின் உடல் ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. பெங்களூரில் இருந்து மண்டியா வரை வழிநெடுகிலும் சாலையில் நின்றிருந்த மக்கள் குருவின் உடல் தாங்கிவந்த வாகனத்தை நிறுத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
 பாரதத் தாயே வாழ்க, வீரர் குரு வாழ்க, பாகிஸ்தான் ஒழிக போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. குருவின் உடல் கொண்டுவந்த வாகனத்தின் மீது மலர்களைத் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
 குரு பிறந்த குடிகெரே கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு கிராம மக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு, அவரது உடல் தற்போது அவரது பெற்றோர் வசித்து வரும் கே.எம்.தொட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரது உடலைக் கண்டு அவரது தந்தை ஹொன்னையா, தாய் சிக்கதாயம்மா, மனைவி கலாவதி கதறி அழுதனர்.
 8 மாதங்களுக்கு முன் குருவைத் திருமணம் செய்திருந்த கலாவதி அழுது புலம்பியபடியே இருந்தார்.
 இறுதி மரியாதை: குருவின் உடலுக்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, குருவின் உடலுக்கு முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், மத்திய அமைச்சர் சதானந்த கெüடா, முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாஜக எம்.பி. ஷோபா கரந்தலஜே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இறுதி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு, குருவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. குருவின் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
 கடைகள் அடைப்பு: பயங்கரவாதிகளின் தாக்குதலைக் கண்டித்து பெங்களூரில் வணிகப் பகுதியான சிக்பேட், கெம்பே கெüடா சாலை, அவென்யூ சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், மக்கள் வீதியில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT