இந்தியா

தொழிலாளர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதம் உயர்வு

DIN


தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பான திட்டத்தில் ஒன்றான வருங்கால வைப்பு நிதித் திட்டம், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் ஈட்டிய மொத்த ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அந்தந்த தொழில் நிறுவனங்கள் செலுத்துகின்றன. மேலும், தொகைக்கான வட்டியும் செலுத்தி, மொத்தமாக கணக்கு வைக்கப்படுகிறது. 

இதன்மூலம், தொழிலாளர்கள் ஓய்வு பெற்றபின் தங்களை பாதுகாத்துக்கொள்ள சமூக பாதுகாப்பானத் திட்டமாக இது செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் திருமணம், வீடு, கல்வி போன்ற தேவைகளுக்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடனாக பெறவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. 

இந்நிலையில், மத்திய வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளையின் 224-ஆவது கூட்டம் இன்று கூடியது. அப்போது, 2018-19 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதம் உயர்த்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், 6 கோடி பயனாளர்கள் பயனடையவுள்ளனர். 

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார், "மத்திய வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களும் வைப்பு நிதி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு சம்மதம் தெரிவித்தனர். எனவே, இது ஒப்புதல் பெறுவதற்காக தற்போது நிதித் துறைக்கு அனுப்பப்படுகிறது. தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 6 கோடி பேர் செயல்பாட்டில் உள்ளனர். இதில், ரூ.11 லட்சம் கோடி வைப்பு நிதியாக உள்ளது. வைப்பு நிதி வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பிறகு கூடுதலாக அதில் ரூ.150 கோடி இருக்கும்" என்றார்.

மத்திய வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைக்கு மத்திய தொழிலாளர் நலன் துறை அமைச்சர் தலைமை வகிப்பார். இது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதங்களை இறுதி செய்யும் அதிகாரம் கொண்ட உச்சபட்ச அமைப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்திக்காடு கிராம விவசாயிகளுக்கு பயறு வகை சாகுபடி பயிற்சி

கேழ்வரகு கொள்முதல் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

SCROLL FOR NEXT