இந்தியா

வேலையில்லா பிரச்னை இருப்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது: ராகுல் காந்தி

DIN

நாட்டில் படித்தவர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் வேலைவாய்ப்பு இல்லாத பிரச்னை நிலவுகிறது என்பதை மத்திய அரசு ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது தொடர்பாக இளைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி சனிக்கிழமை கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
சீனா பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகிறது. நாட்டில் பெரும்பாலான பொருள்கள் "சீனா தயாரிப்பு' என்ற அடையாளத்துடன் விற்பனையாகின்றன. சீனாவைக் காட்டிலும் இந்தியா வளர்ச்சி அடையும் என நம்பியிருந்தேன்.
சுமார் 125 கோடி மக்கள் தொகையை கொண்ட நமது நாட்டில், 24 மணி நேரத்தில் 450 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதே 24 மணி நேரத்தில் 50,000 வேலைவாய்ப்புகளை சீனா உருவாக்குகிறது. இவையெல்லாம் நான் தெரிவிக்கும் புள்ளிவிவரம் அல்ல. மத்திய நிதியமைச்சகம் சார்பில் மக்களவையில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்கள்தான்.
இதை பிரச்னையாகவே நமது பிரதமர் கருதவில்லை என்று தோன்றுகிறது. முதலில், பிரச்னை இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.  பிறகு அதை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும். இத்தகைய செயல்பாட்டு முறையில்தான் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், ஊழல், வேலையின்மை மற்றும் பிற பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த தயார் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்கெனவே சவால் விடுத்திருந்தேன். அவர் இதுபோன்று மாணவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறாரா? அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறாரா?
இளைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாட வேண்டும். வேலைவாய்ப்பு சூழல் குறித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமெனில் அவருக்கு உங்களின் ஆதரவு தேவைப்படும்.
பிரதமர் தனது கருத்துக்களை மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. மாணவர்களின் கருத்துக்களை அவர் கவனிக்க வேண்டும். கல்வியை மேம்படுத்த தனியார் துறைக்கு ஆதரவளிப்பது சரியான நடவடிக்கை அல்ல. அதை காங்கிரஸ் ஆதரிக்காது. பட்ஜெட் அறிவிப்பில் கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் அளவை  மேலும் அதிகரிக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT