அஸ்ஸாம்: கள்ளச் சாராய பலி 157-ஆக அதிகரிப்பு: 22 பேர் கைது
அஸ்ஸாமில் கள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 157-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 300 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அஸ்ஸாமில் கள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 157-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 300 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, 22 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
அஸ்ஸாம் மாநிலத்தில் ஜோர்ஹட், கோலாகாட் ஆகிய மாவட்டங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், கடந்த வியாழக்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.
அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இரு மாவட்டங்களிலும் இதுவரை 157 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும், 300 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 22 பேரை கைது செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கள்ளச் சாராய விற்பனையை தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, கோலாகாட்டில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, மாநில கலால் துறை அமைச்சர், தேயிலை தோட்ட பழங்குடியின தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தருண் கோகோய் கூறுகையில், அஸ்ஸாம் மாநில வரலாற்றிலேயே இதுபோன்றச் சம்பவம் நிகழ்ந்ததில்லை. கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இதுதொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிப்பதுடன், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
முன்னதாக, கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் சர்வானந்த சோனோவால் அறிவித்திருந்தார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கள்ளச் சாராயத்துக்கு 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, அஸ்ஸாமில் கள்ளச் சாராயத்துக்கு பலர் உயிரிழந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.