முகப்பு
இந்தியா

பாதுகாப்புப் படைகளை அலட்சியமாக நடத்திய காங்கிரஸ்: பிரதமர் நரேந்திர மோடி

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புப் படைகள் அலட்சியத்துடன் நடத்தப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:30 am IST
பகிர்:


முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புப் படைகள் அலட்சியத்துடன் நடத்தப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்ட குழு, பிரதமர் மோடியை திங்கள்கிழமை சந்தித்தது. அவர்களிடையே மோடி பேசியதாவது:
மத்தியில் பாஜக அரசு 2014ஆம் ஆண்டு அமைவதற்கு முன்பு, ஆட்சியிலிருந்த அரசு, பாதுகாப்புப் படைகளையும், தேசப் பாதுகாப்பையும் அலட்சியமாக நினைத்தது. இதனால் பாதுகாப்புப் படைகளும், தேசப் பாதுகாப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
முந்தைய அரசை பொறுத்தமட்டில், குடும்பத்துக்குதான் முதல் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் என்னை பொறுத்த வரையில், இந்தியாவுக்குதான் முதல் முன்னுரிமை.
தில்லியில் தேசிய போர் நினைவிடத்தை கட்டும் விவகாரத்தில் முந்தைய அரசுகள், தாமதம் செய்தன. இது தமது உயிரைத் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதேபோல், முந்தைய அரசின் ஆட்சியில் பாதுகாப்புத் தளவாட கொள்முதல் தொடர்பான முடிவும், பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்துவது தொடர்பான முடிவும் கிடப்பில் போடப்பட்டிருந்தன.
ஆனால் மத்தியில் எனது அரசு ஆட்சிக்கு வந்ததும், அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒப்புதல் அளித்தது.
முன்னாள் ராணுவத்தினருக்காக 3 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை மத்திய அரசு அமைத்து தந்துள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், தேவையில்லாத குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து, அந்த விமானங்கள், இந்தியாவுக்கு வர விடாமல் தடுக்க முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்தன. அந்த விமானங்கள் திட்டமிட்டபடி இந்தியாவுக்கு வரும். இன்னும் சில மாதங்களில், நமது வான்பரப்பில் அந்த விமானங்கள் பறக்கும் என்றார் மோடி.
தில்லியில் கட்டப்பட்டுள்ள தேசிய போர் நினைவிடத் திறப்பு விழாவுக்கு முன்னதாக, முன்னாள் ராணுவத்தினர் இடையே மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.