சபரிமலையில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்த 2 பெண்கள்: பதற்றம்; நடை சாத்தப்பட்டது (வீடியோ)
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலைக்கு இன்று அதிகாலை சென்ற 50 வயதுக்குக் குறைவான இரண்டு பெண்கள் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்து வந்துள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை: கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலைக்கு இன்று அதிகாலை சென்ற 50 வயதுக்குக் குறைவான இரண்டு பெண்கள் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்து வந்துள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் சபரிமலைக்கு செல்ல பம்பை வந்த இரண்டு பெண்களும், காவல்துறை அனுமதியோடு நேற்று இரவு மீண்டும் மலை ஏறத் தொடங்கினர். இன்று அதிகாலை 3.45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்து ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு காலை 5 மணிக்குள் மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.
பம்பை வந்த இரண்டு பெண்களும், காவல்துறை பாதுகாப்போடு நாங்கள் ஐயப்பனை தரிசித்து வந்தோம் என்று தெரிவித்த பிறகே இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசித்த விவகாரம் வெளியே தெரிய வந்தது.
இதனால் சபரிமலை கோயில் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. சபரிமலை தந்திரி ஆலோசனை நடத்தி, சாந்தி பரிகாரம் செய்ய ஐயப்பன் கோயில் நடை மூடப்பட்டுள்ளது.