பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு, கல்வி-வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், உயர் ஜாதியினரின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் நோக்கில் மத்திய அரசு மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளதாகவே இது கருதப்படுகிறது.
ஏழை, எளிய மக்களை அதிகம் கொண்டிருக்கும் இந்தியாவில், பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பது என்பது கோடிக்கணக்கான மக்களின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இந்த இட ஒதுக்கீடு என்பது சட்ட ரீதியான ஆய்வுக்குட்பட வேண்டும்.
சட்டப்படி, பின்தங்கிய என்ற ஒரு தகுதியை ஏதோ ஒரே ஒரு வார்த்தையால் நிர்ணயித்து விட முடியாது. அது பொருளாதார ரீதியில் இருந்தாலும் சரி. பின்தங்கிய என்பது சமூக ரீதியிலாகவும், கல்வி அளவிலானதாகவும் இருக்க வேண்டும். எனவே, இந்த அடிப்படையில் எடுத்துக் கொண்டால் பொருளாதார ரீதியில் பின்தங்கிய என்ற தகுதியை மோடி அரசு இங்கே நியாயப்படுத்த வேண்டும் அல்லது அந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
2014ம் ஆண்டு இதேப்போன்று பொதுத் தேர்தலுக்கு முன்பு ஜாத் இட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முடிவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி ஜாத் இன மக்களை ஓபிசியின் கீழ் கொண்டு வருவது என்பதே அந்த முடிவு. இதனால் ஜாத் இன மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். இது தொடர்பான வழக்கு 2015ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தை அடைந்த போது, ஒரு பிரிவினரை பின்தங்கியவர்களாக அறிவிக்க அவர்களது ஜாதி என்ற ஒரே ஒரு காரணம் போதாது என்றும், பின்தங்கிய என்றால் சமூக அடிப்படையில் மற்றும் கல்வித் தரத்தில் அல்லது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டது.
1992ம் ஆண்டு இதே போன்றதொரு வழக்கில், உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது என்னவென்றால், மாநில அரசு அளிக்கும் எந்த இட ஒதுக்கீடும் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக இருந்தால் அதனை நீதிமன்றம் ரத்து செய்து விடும், மேலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு அது எதிரானது என்றும் கூறியிருந்தது.
இது பற்றி முன்னாள் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் அமரேந்திர ஷரன் கூறுகையில், இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மத்திய அரசின் இடஒதுக்கீடு 60% ஆக உயர்கிறது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது. எனவே இது சட்டப்படி தவறு என்று தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்படி பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய சட்டத்தில் இடமில்லை, ஒன்று கல்வி அல்லது சமூக ரீதியில் பின்தங்கியவர்களுக்கே இட ஒதுக்கீடு என்றும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இப்போது கூடுதலாக பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது. இதனால், இடஒதுக்கீட்டு உச்சவரம்பு 60 சதவீதமாக அதிகரிக்கும். இதுதொடர்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு தற்போது எந்த வகையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமெனில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, அரசமைப்புச் சட்டத்தின் 15, 16-ஆவது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. எனினும், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இடஒதுக்கீடு உச்சவரம்பை அதிகரிக்க வழி ஏற்படுத்தப்படும். இந்த மசோதா நிறைவேற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
பொதுப் பிரிவினரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் அல்லது 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கே இந்த இடஒதுக்கீட்டு பலன்கள் கிடைக்கும்.
பிராமணர், ராஜபுத்திரர்கள், ஜாட், மராத்தா உள்ளிட்ட உயர் ஜாதியினர் இந்த நடவடிக்கையால் பலனடைவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக வியூகம்: அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், உயர் ஜாதியினர் முன்வைத்து வரும் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற எதிர்க்கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை. அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்காவிட்டால், அவை உயர் ஜாதியினரின் அதிருப்திக்கு ஆளாகும் என்று பாஜக நம்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் நேர ஏமாற்று வித்தை: பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் முடிவு, பாஜகவின் தேர்தல் நேர ஏமாற்று வித்தைகளில் ஒன்று என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.