இந்தியா

கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்!

DIN

பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் தொடங்கிய கும்பமேளா விழாவில் உலகெங்கிலும் இருந்து வந்துள்ள லட்சக்கணக்கான சாதுக்கள், பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

உலகில் மத ரீதியாக நடத்தப்படும் மாபெரும் விழாக்களில் ஒன்றாக கும்பமேளா கருதப்படுகிறது. நாசிக், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, ஹரித்வார் ஆகிய நகரங்களில் சுழற்சி முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடத்தப்படுகிறது. அதில் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் "திரிவேணி சங்கம்' பகுதியில் நடத்தப்படும் கும்பமேளா, மற்ற இடங்களைக் காட்டிலும் சிறப்புமிக்கதாகும்.

மகர சங்கராந்தி தினமான இன்று காலை பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா விழா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து வந்துள்ள லட்சக்கணக்கான சாதுக்கள், பக்தர்கள் இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். 

மார்ச் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கும்பமேளா விழாவில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரயிருப்பதால் மத்திய, மாநில அரசுகள் ரூ.4,200 கோடி ஒதுக்கீடு செய்து, குடிநீர், 250 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகள், மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கங்கையாற்றங்கரையில் 32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் ‘கும்ப்நகரி’ என்ற தற்காலிக நகரம் உருவாக்கியுள்ளனர்.

 இந்த திருவிழாவில் ஏறக்குறைய 12 கோடி பேர் வரை பங்கேற்பார்கள் என உ.பி. அரசு எதிர்பார்க்கிறது. 

அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உத்தப்பிரதேச மாநில அரசின் 15 துறைகளும், மத்திய அரசின் 28 துறைகளும் இணைந்து கும்பமேளா திருவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

இந்த கும்பமேளா பண்டிகைக்கு "மனிதகுலத்தில் இன்றியமையாத கலாசார பாரம்பரிய விழா' என்று யுனெஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.

உலகெங்கிலும் இருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ளும் இந்த கும்பமேளாவில், தில்லியில் உள்ள 70 நாடுகளின் தூதர்கள் சிறப்பு விமானம் மூலமாக பிரயாக்ராஜ் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT