பாஜகவின் அடுத்த ஏமாற்று வித்தை என ப. சிதம்பரம் சொல்லுவது இதைத்தானா?
ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பாஜக அரசின் அடுத்த ஏமாற்று வித்தை என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
புது தில்லி: ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பாஜக அரசின் அடுத்த ஏமாற்று வித்தை என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் சிதம்பரம் கூறியிருப்பதாவது, கடந்த 5 ஆண்டுகளாக ரயில்வேயில் 2,82,976 பணியிடங்களை காலியாகவே வைத்திருந்தமத்திய அரசு, திடீரென விழித்துக் கொண்டு, அனைத்து காலிப் பணியிடங்களையும் அடுத்த 3 மாதங்களில் நிரப்ப உள்ளதாகக் கூறுகிறது.
ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று பேசுகையில், ரயில்வே துறை அடுத்த 6 மாதத்துக்குள் 1.31 லட்சம் ஊழியர்களை நியமிக்கப் போவதாகவும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை அடுத்த 2 ஆண்டுக்குள் உருவாக்கப் போவதாகவும் அறிவித்தார்.
அதாவது, இந்திய ரயில்வேயில் பணியாற்ற ஒப்புதல் பெற்றிருக்கும் மொத்த எண்ணிக்கை 15,06,598 ஊழியர்கள். இதில் தற்போது 12,23,622 பேர்தான் பணியில் உள்ளார்கள். மீதம் 2,82,972 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 1,51,548 பணியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில் 1,31,428 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கோயல் தெரிவித்திருந்தார்.