இந்தியா

கார்த்தி சிதம்பரத்தின் மனு: அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

DIN

வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்த இருக்கும் தேதியைத் தெரிவிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா ஆகிய வழக்குகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்துள்ளன; அவரிடம் அவ்வப்போது விசாரணையும் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், டென்னிஸ் தொடர் ஒன்றில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் முன்னாள் டென்னிஸ் வீரர் என்றும், தற்போது பிரிட்டனிலுள்ள நிறுவனம் ஒன்றுடன் இணைந்து டென்னிஸ் தொடரை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, கார்த்தி சிதம்பரம் மீது முக்கிய விசாரணைகள் நடத்த வேண்டி இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார்.  பின்னர் நீதிபதிகள், ""மனுதாரர் வெளிநாடு செல்வது குறித்தும், விசாரணையில் பங்கேற்பது குறித்தும் நாங்கள் முடிவு செய்வோம். மனுதாரரிடம் விசாரணை மேற்கொள்ள இருக்கும் நாள்களை ஜனவரி 30-ஆம் தேதிக்குள் அமலாக்கத் துறை தெரிவிக்க வேண்டும். அந்த நாளில் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால், மனுதாரர் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட மாட்டார்'' என்றனர்.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அவர் வெளிநாடு சென்று வந்தார்.  
முன்னதாக, இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, "கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அளித்த சுதந்திரத்தை அவர் தவறாகப் பயன்படுத்துகிறார். விசாரணைக்குக் குறுக்கீடு விளைவிக்கும் நோக்கில், அவர் அடிக்கடி வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார். கடந்த 6 மாதங்களில், 51 நாள்கள் அவர் வெளிநாடுகளில் இருந்துள்ளார்' என்று அமலாக்கத் துறை 
தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT