இந்தியா

தண்ணீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநிலங்களுடன் இணைந்து நடவடிக்கை: மத்திய நீர்வளத் துறை அமைச்சர்

DIN

தண்ணீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் சரிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயலாற்றி வருவதாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
ஐ.நா. தீர்மானத்தின்படி, நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் 2030-ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. தற்போது, அந்த இலக்கை 2024-ஆம் ஆண்டுக்குள்ளாகவே எட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தொடர்புடைய விவகாரங்கள், மாநில அரசு சம்பந்தப்பட்டவை. எனினும், தண்ணீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் சரிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு செயலாற்றி வருகிறது.
கிராமப் புற வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக, மத்திய அரசின் பங்களிப்புடன் தேசிய ஊரகக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான உதவிகள் வழங்கப்படுகின்றன. குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தேசிய ஊரகக் குடிநீர்த் திட்ட நிதியில் 25 சதவீத தொகையை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ், மழை நீரை சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீர் ஆதாரங்கள் மேலாண்மையை ஒருங்கிணைக்கும் வகையில், மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை தூய்மைப்படுத்துதல் அமைச்சகமும், மத்திய குடிநீர், துப்புரவு பணிகள் அமைச்சகமும் இணைக்கப்பட்டு, புதிதாக ஜல் சக்தி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிப்பதற்காக, அனைத்து மாநில நீர்வளத் துறை அமைச்சர்களின் கூட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 11-ஆம் தேதி நடத்தியது. நீர்ப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அண்மையில் கடிதம் எழுதினார் என்று ஷெகாவத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT