இந்தியா

மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம்: கேரள அரசு திட்டம்

DIN


சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
மூடநம்பிக்கைகளுக்கு எதிரான வரைவு மசோதாவை கேரள சட்ட சீர்திருத்தக் குழு, மாநில அரசிடம் வழங்கியுள்ளது. இதில், மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது, பேய் ஓட்டுவது என்ற பெயரில் மக்களிடம் பணம் பறிப்பது, மாதவிடாய் காலத்திலும், மகப்பேற்றுக்குப் பிந்தைய காலத்திலும் பெண்களைத் தனிமைப்படுத்துவது உள்ளிட்டவற்றுக்குக் கடும் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், மக்களுக்குத் தீங்கிழைக்காத வாஸ்து சாஸ்திரம், ஜோதிட நிபுணர்களின் ஆலோசனைகள் உள்ளிட்டவற்றுக்குத் தண்டனையிலிருந்து விலக்களிக்க வரைவு மசோதா பரிந்துரைத்துள்ளது.  
மூடநம்பிக்கைகளால் மக்கள் ஏமாறாமல் இருக்கப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வரைவு மசோதா பரிந்துரைத்துள்ளது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதாவை மகாராஷ்டிர அரசு கடந்த 2013-ஆம் ஆண்டும், கர்நாடக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டும் நிறைவேற்றியுள்ளன. 
வரைவு மசோதா தொடர்பாக, சட்ட சீர்திருத்தக் குழுவின் துணைத் தலைவர் சசிதரன் நாயர் கூறுகையில், இது மக்களின் உணர்வுகள் சார்ந்த விவகாரம் என்பதால், மிகுந்த சிரத்தையுடன் வரைவு மசோதாவைத் தயாரித்துள்ளோம். மகாராஷ்டிரம், கர்நாடக அரசுகளின் மசோதாக்களைப் போன்று அல்லாமல், மூடநம்பிக்கைகள் குறித்து மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளோம்.  சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன் மக்களின் கருத்துகளை மாநில அரசு கேட்டறிய வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன். அரசு எவ்வளவு கடுமையான சட்டத்தை இயற்றினாலும், மக்களின் மனதில் மாற்றம் ஏற்படாதவரை மூடநம்பிக்கைகளை ஒழிக்க முடியாது என்றார் சசிதரன் நாயர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT