இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: கர்நாடக சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

DIN


கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கோரி சுயேட்சை எம்எல்ஏ-க்கள் 2 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏ-க்கள் 15 பேர் ராஜிநாமா செய்ததையடுத்து, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அங்கு சிக்கல் உருவானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வதாக குமாரசாமி தெரிவித்தார். 

ஆனால், 18-ஆம் தேதி முழுவதும் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இதன்பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவும் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கெடு விதித்தார். ஆளுநர் கெடு விதித்த 1.30 மணியைக் கடந்தும் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. 

இதன்பிறகு, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு ஆளுநர் இரண்டாவது கெடு விதித்தார்.

 இதனிடையே, அவையை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் மற்றும் மஜத வலியுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள், வெள்ளிக்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதனால், இரண்டு தரப்புக்கும் இடையிலான வாக்குவாதம் நீடித்து அமளியே தொடர்ந்தது. 

இதன் காரணமாக, சட்டப்பேரவையை வரும் 22-ஆம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து பேரைவத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடக சுயேட்சை எம்எல்ஏ-க்கள் ஆர். ஷங்கர் மற்றும் ஹெச். நாகேஷ் ஆகியோர் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரி உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  

முன்னதாக, திங்கள்கிழமையே குமாரசாமி அரசின் கடைசி தினம் என்று எடியூரப்பா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT