முகப்பு
இந்தியா

2-ஆம் நிலை உயர்வை வெற்றிகரமாக அடைந்த சந்திரயான்-2

ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று நிலவின் சுற்றுவட்டப் பாதையை விண்கலம் சென்றடையும்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:38 AM
பகிர்:

ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிடங்கள் 23 விநாடிகளில் ராக்கெட்டிலிருந்து சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக பிரித்துவிடப்பட்டது.

திட்டமிட்டதைவிட 6000 கி.மீ. தொலைவிலான புவி சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது. அதாவது, புவியிலிருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் உடைய நீள்வட்டப் பாதையில் புவியை சுற்றிவரும் வகையில் விண்கலம் நிறுத்தப்பட்டது. அதன்மூலம் புவியிலிருந்து குறைந்தபட்சம் 230 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 45,163 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு விண்கலத்தை வெற்றிகரமாக விஞ்ஞானிகள் நிலை உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில், இரண்டாவது நிலை உயர்வை விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அதிகாலை 1.08 மணிக்கு மேற்கொண்டர். அதன் மூலம் புவியிலிருந்து குறைந்தபட்சம் 251 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 54,829 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு விண்கலம் நிலை உயர்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜூலை 29, ஆகஸ்ட் 2, 6, 14 ஆகிய தேதிகளிலும் விண்கலம் படிப்படியாக நிலை உயர்த்தி இறுதியாக புவியிலிருந்து குறைந்தபட்சம் 278.4 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 4,12,505 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும் வகையில் நிறுத்தப்படும். 

இந்த இறுதி புவி சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் சுற்றிவரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்றே, நிலவை நோக்கி நகர்த்தும் பணியும் தொடங்கப்படும். தொடர்ந்து 5 நாள்கள் இந்த நகர்வு நடைபெறும். பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று நிலவின் சுற்றுவட்டப் பாதையை விண்கலம் சென்றடையும்.

செப்டம்பர் 2-ஆம் தேதி விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதிக்குள் இருந்து லேண்டர் பிரித்துவிடப்படும். இந்த லேண்டர் பகுதி தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றி வந்து, செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறக்கப்படும். லேண்டர் தரையிறங்கிய 4 மணி நேரத்துக்குப் பின்னர், அதனுள் இருக்கும் 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் நிலவில் இறக்கிவிடப்படும்  

நிலவின் தென்துருவத்தில் தண்ணீர் மற்றும் பிற கனிமங்கள் இருப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு, சூரியக் குடும்பம் உருவானது குறித்து புரிந்துகொள்வதற்கான தகவல்களைப் பெறுவதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →