பால்வெளி அண்டத்தில் 28 புதிய வகை விண்மீன்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றின் ஒளிரும் தன்மை, சீராக இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள ஆரியபட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏரீஸ்) இயக்குநர் வஹாப் உத்தீன் கூறுகையில், பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில் பூமிக்கு அருகில் அமைந்துள்ள என்ஜிசி 4147 என்ற விண்மீன் தொகுதியில், புதிய வகையிலான 28 விண்மீன்களைக் கண்டுபிடித்துள்ளோம். அவற்றின் ஒளிரும் தன்மையானது, நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கிறது. இது அரிய நிகழ்வாகும் என்றார்.
புதிய வகை விண்மீன்கள் தொடர்பாக, ஏரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி அனில் பாண்டே கூறியதாவது:
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள நைனிடால் மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டோம். என்ஜிசி 4147 விண்மீன் தொகுதியில், முதல் முறையாக மாறுபட்டு ஒளிரும் வகையிலான விண்மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. விண்மீன்களின் ஒளிரும் தன்மை மாறுபட்டுக் காணப்படுவதற்கு, அந்த விண்மீன்களின் சீரான சுருங்கி விரியும் தன்மையோ அல்லது மற்ற வானியல் பொருள்களின் நிழல் இவற்றின் மீது விழுவதோ காரணமாக இருக்கலாம்.
இந்தக் கண்டுபிடிப்பானது, விண்மீன் தொகுதிகள் உருவான விதம் குறித்தும், அவற்றிலுள்ள பொருள்கள் குறித்துமான ஆராய்ச்சிகளுக்குப் புதிய தகவல்களை அளிக்கும் என்று நம்புகிறோம். இந்த ஆராய்ச்சியின்போது, என்ஜிசி 4147 விண்மீன் தொகுதியின் உள்கட்டமைப்பு குறித்தும் அறிந்துகொண்டோம்.
என்ஜிசி 4147 விண்மீன் தொகுதியைக் கடந்த 1784-ஆம் ஆண்டு கண்டறிந்த பிரிட்டன் வானவியலாளர் வில்லியம் ஹெர்ஷெல், இந்த விண்மீன் தொகுதியானது அதிக அளவிலான ஒளிரும் தன்மையைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். அதிகப்படியான ஈர்ப்புவிசை காரணமாக இந்த விண்மீன் தொகுதி கோளவடிவில் காணப்படுகிறது என்றார் அனில் பாண்டே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.