ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது ஆர்பிஐ: வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும்
வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும் வகையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகியக் கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைத்துள்ளது.
மும்பை: வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும் வகையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகியக் கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைத்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து 3வது முறையாகக் குறைத்துள்ளது ஆர்பிஐ.
இதன் மூலம், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6 சதவீதத்தில் இருந்து குறைந்து 5.75 சதவீதமாக இருக்கும்.
இதன் அடிப்படையில், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களின் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறைய வாய்ப்பு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதே போல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.2 சதவீதத்தில் இருந்து குறைத்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி 7.2 ஆக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்ட நிலையில் அதை 7 சதவீதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி.
2019-20ம் நிதியாண்டின் முதல் பாதியில் பணவீக்கம் 3-3.1% ஆக இருந்த நிலையில், இது அடுத்த பாதியில் 2-6% ஆக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்துள்ளதன் மூலம், தொழில்முனைவோர், சிறு தொழில்புரிவோர், வீடு, வாகனங்கள் வாங்குவோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைக்கும்.