இந்தியா

ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்: மோடி

ANI


புது தில்லி: 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை காலை தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளோடு கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்தக் கூட்டத் தொடர், ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறும். மக்களவைக்கு புதிய தலைவர் 19-ஆம் தேதி தேர்வு செய்யப்பட  இருக்கிறார்.

முன்னதாக மக்களவைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, புதிய கனவுகள், புதிய நம்பிக்கையோடு 17வது நாடாளுமன்றம் இன்று  கூடுகிறது. நாட்டிற்கு சேவையாற்ற மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தினார் மோடி.

மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த மாதம் 30-ஆம் தேதி பதவியேற்றது.

இதையடுத்து 17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை இடைக்காலத் தலைவராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த எம்.பி.யான வீரேந்திர குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், புதிய எம்.பி.க்களுக்கு வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சற்று முன் பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவராக பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்கள்.

இதில் முதல் 2 நாள்கள், அதாவது 17,18-ஆம் தேதிகளில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 542 பேரும் பதவியேற்கும் நிகழ்வு நடைபெறும். 19-ஆம் தேதி மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

இதன்பின்னர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 20-ஆம் தேதி உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜூலை 5-இல் பட்ஜெட் தாக்கல்: இதையடுத்து மக்களவையில் ஜூலை 5-ஆம் தேதியன்று பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தல் முடிவடைந்தபிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். ஆதலால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT