இந்தியா

பயங்கரவாதத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்

DIN

"பயங்கரவாதம் தனது மண்ணில் இருந்து செயல்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதி அளிக்கக் கூடாது; பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், "பயங்கரவாத நிதியுதவி தடுப்பு கண்காணிப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) அளித்த செயல்திட்டங்களை செப்டம்பர் மாதத்துக்குள் பாகிஸ்தான் நிறைவேற்றி முடிக்க வேண்டும்' என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடர்பாக, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், "குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்திட்டங்களை நிறைவேற்றத் தவறியதால், பாகிஸ்தானை "கிரே' பட்டியலில் வைக்க எஃப்ஏடிஎஃப் முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் சர்வதேச அமைப்பின் செயல்திட்டங்களை பாகிஸ்தான் நிறைவேற்றிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து செயல்பட்டுவரும் சர்வதேச அமைப்பு எஃப்ஏடிஎஃப் ஆகும். இந்த அமைப்பு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செல்வதைத் தடுப்பதை முக்கியப் பணியாகக் கொண்டிருக்கிறது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனையையும் இந்த அமைப்பு கண்காணிக்கிறது.
"கிரே' பட்டியலில் பாகிஸ்தான்: லஷ்கர்}ஏ}தொய்பா, ஜெய்ஷ்}ஏ}முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்லாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதால் பாகிஸ்தானை "கிரே' பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்க சர்வதேச பயங்கரவாத நிதியுதவி தடுப்பு கண்காணிப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இந்த வாரம் முழுக்க நடைபெற்று வந்த எஃப்ஏடிஎஃப் ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்தது.  அதையடுத்து, அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செல்லாமல் தடுக்க கடுமையான, உறுதியான நடவடிக்கைகளை கடந்த ஜனவரி தொடங்கி மே மாதத்துக்குள் பாகிஸ்தான் அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். அதனைச் செய்யத் தவறியதால் பாகிஸ்தானை "கிரே' பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்லாமல் தடுக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளவில்லை என்றால், அந்நாட்டை கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நாடுகள் குரல் எழுப்பின. 

லஷ்கர்}ஏ}தொய்பா, ஜெய்ஷ்}ஏ}முகமது, ஜமாத் உத் தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்குச் சொந்தமான 700 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்து வருகிறது. எனினும், சர்வதேச பயங்கரவாதிகளாக ஐ.நா. சபை அறிவித்துள்ள சயீத், மசூத் அஸார் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று எஃப்ஏடிஎஃப் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவின் தொடர் முயற்சியால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் "கிரே' பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன்காரணமாக, சர்வதேச நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன்காரணமாக, பாகிஸ்தான் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

"கிரே' பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்தபோது, அந்நாட்டு அரசிடம் 27 செயல் திட்டங்களை நிறைவேற்றுமாறு எஃப்ஏடிஎஃப்  அளித்தது. இதுதொடர்பான ஆய்வைக் கடந்த ஆண்டு அக்டோபரில் எஃப்ஏடிஎஃப் செய்தது. எனினும், கடந்த பிப்ரவரி மாதம், பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து இந்தியா புதிய தகவல்களை அளித்ததால், அந்நாடு மீண்டும் "கிரே' பட்டியலில் சேர்க்கப்பட்டது. 

பாகிஸ்தான் புகார்

இஸ்லாமாபாத்: பயங்கரவாத நிதியுதவி தடுப்பு கண்காணிப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை குறுகிய மனப்பான்மை காரணமாக இந்தியா அரசியலாக்குகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எஃப்ஏடிஎஃப் அறிக்கையைக் கொண்டு இந்திய அரசு வெளியிட்ட அறிக்கை தேவையற்றதும், அபத்தமானதும் ஆகும். சர்வதேச அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதை இந்திய அரசு அரசியலாக்குவது அதன் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது. தீங்கிழைக்கும் எண்ணத்துடன் இந்தியா எடுத்து வரும் முயற்சிகளை சர்வதேச அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்காமல் இருப்பதற்கு துருக்கி, சீனா, மலேசியா ஆகிய நாடுகள் துணை நிற்கின்றன.

"கிரே' பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளிவர வேண்டுமானால், உறுப்பினராக உள்ள 36  நாடுகளில் குறைந்தது 15 நாடுகளின் ஆதரவையாவது பெற வேண்டும்.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இருப்பதால் சுமார்  ரூ.10 ஆயிரம் கோடி ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT