ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 11 வயது சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்த வழக்கில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சிறாருக்கு கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2017ம் ஆண்டு நடந்தது. 11 வயது சிறுவனை பள்ளியின் மொட்டை மாடிக்குக் கூட்டிச் சென்ற குற்றவாளி, பாலியல் ரீதியாக துன்பறுத்தி, படுகொலை செய்துவிட்டு உடலை அங்கேயே வீசிவிட்டான்.
சுமார் 10 நாட்களுக்குப் பிறகுதான் அந்த சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
காலையில் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயமாகி, 10 நாட்கள், அவனது கதி என்னவானது என்று தெரியாமல் இருந்ததால் இந்த சம்பவம் அந்த நேரத்தில் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியது.
இறுதியாக வீட்டுக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், குற்றவாளியுடன், சிறுவன் சென்றிருப்பது பதிவானதை வைத்து சிறுவனைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில், அவனும் குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறுவனின் உடல் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டினான்.
அப்போதுதான், சிறுவனை, அரசு ஆண்கள் உயர் நிலைப் பள்ளிக்குக் கூட்டிச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு அல்லாமல், சிறுவனை மிகக் கொடூரமாக சித்ரவதை செய்துள்ளான். கை, கால்களை துணியால் கட்டி வைத்து, இரும்புக் கம்பியால் தலையில் ஓங்கி அடித்துக் கொலை செய்துள்ளான் என்று தெரிய வந்தது.
இது குறித்து விசாரித்த காவல்துறையினர், சிறாரான குற்றவாளி மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 364, 377, 302, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை செய்தல், ஆதாரங்களை அழித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவன் மீது போடப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த வழக்கு சிறார்களுக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பிறகு இந்த வழக்கு ஹைதராபாத்தில் உள்ள குழந்தைகளுக்கான நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
விசாரணையின் இறுதியில், சிறார்களுக்கான நீதியின் 21வது பிரிவின்படி பார்த்தால், குற்றம்சாட்டப்பட்ட நபர் செய்திருக்கும் குற்றமானது, 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்க வகை செய்கிறது. அதன் அடிப்படையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறாருக்கு கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.