பாகிஸ்தானில் தரையிறங்கியவுடன் ஆவணங்களை விழுங்க நினைத்தாரா அபிநந்தன்?
இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் தரையிறங்கியவுடன் தன்னிடம் இருந்த சில ஆவணங்களை விழுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் தரையிறங்கியவுடன் தன்னிடம் இருந்த சில ஆவணங்களை விழுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்திய விமானப் படையினர் கடந்த செவ்வாய்கிழமை எல்லை கட்டுப்பாட்டை கடந்து சென்று குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதன்கிழமை காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த எண்ணியது. இதனை இந்திய விமானப் படை தகுந்த முறையில் எதிர்கொண்டதால் பாகிஸ்தான் போர் விமானத்தால் தனது தாக்குதலை சரியாக செயல்படுத்தமுடியவில்லை. அதன்விளைவாக, பாகிஸ்தானின் இந்த தாக்குதலால் இந்தியாவில் எந்தவித பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
ஆனால், இந்த போர் விமான சண்டையில் இந்தியாவின் மிக் 21 ரக விமானத்தால் பாகிஸ்தானின் எஃப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதேசமயம், இந்திய விமானம் மீதும் பாகிஸ்தான் விமானம் தாக்குதல் நடத்தியது. இதன்மூலம், இந்தியாவும் ஒரு போர் விமானத்தை இழந்தது. எனினும், விமானத்தை இயக்கிய இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பிக்க முயன்று பாகிஸ்தானில் தரையிறங்கியதாக தெரிகிறது.
இந்த சம்பவங்களை பாகிஸ்தான் எல்லை பகுதியில் வசிக்கும் முகமது ரசாக் சௌத்ரி என்பவர் நேரில் பார்த்ததாகவும், அப்போது இந்திய விமானி அபிநந்தன் தன்னிடம் இருந்த ஆவணங்களை விழுங்கியதாகவும் பாகிஸ்தானில் நேற்று (வியாழக்கிழமை) வெளியான டான் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
அந்த பத்திரிகை செய்தியின்படி,
58 வயதான முகமது ரசாக் சௌத்ரி பாகிஸ்தானின் பிம்பர் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள ஹோரான் கிராமத்தில் வசித்து வருபவர். காலை 8.45 மணியளவில் இரண்டு விமானங்களும் ஒன்றை ஒன்று தாக்குவதை அவர் பார்த்துள்ளார். அதன்பிறகு, ஒரு விமானம் தீப்பிடித்து எல்லை கட்டுப்பாட்டுக்கு அந்த பக்கம் விழுவதையும், மற்றொரு விமானம் வெடித்து சிதறி மிக வேகமாக கீழே விழுவதையும் அவர் பார்த்துள்ளார்.
அதேசமயம், தனது இல்லத்தில் இருந்து தெற்கு திசையில் 1 கி.மீ தொலைவில் ஒரு பாராசூட் தரையிறங்கியதையும் அவர் கவனித்துள்ளார். பாராசூட்டில் தரையிறங்கிய விமானி, கையில் பிஸ்டலுடன் இது இந்தியாவா, பாகிஸ்தானா என்று அங்கிருந்த இளைஞர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் இருந்த ஒருவர் இது இந்தியா என்றார்.
அதன்பிறகு, அந்த விமானி தன்னை விங் கமாண்டர் அபிநந்தன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு சில கோஷங்களை எழுப்பியிருக்கிறார். தொடர்ந்து, இந்தியாவில் இது சரியாக எந்த பகுதி என்று கேட்டிருக்கிறார்.
இதனிடையே, 'பாகிஸ்தான் ராணுவம் ஜிந்தாபாத்' என்று உணர்ச்சிவசத்துடன் ஒரு கோஷம் எழுந்தது. உடனடியாக இந்திய விங் கமாண்டர் வான் நோக்கி சுட்டார். இளைஞர்கள் கையில் கல்லை எடுத்தனர். இதையடுத்து, இளைஞர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி விங் கமாண்டர் பின் நோக்கி ஓட தொடங்கினார். இதையடுத்து, அருகில் இருந்த ஒரு குளத்தில் அவர் குதித்துள்ளார். குளத்தில் அவர் தனது பாக்கெட்டில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை விழுங்க நினைத்தார். அவற்றுள் சில தண்ணீரில் நனைந்தன.
அதன்பிறகு நீண்ட ஒட்டத்துக்கு பிறகு, இளைஞர்கள் அவரை பிடித்தனர்.
எது எப்படியோ, இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் இன்று வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்.