இந்தியா

பாலாகோட் தாக்குதல் குறித்து கேள்வியெழுப்பி எதிர்க்கட்சிகள் சுயலாபம் அடைந்தன: ஜேட்லி

DIN

பாகிஸ்தானின் பாலாகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து கேள்விகளை எழுப்பியதன் மூலம் எதிர்க்கட்சிகள் சுயலாபம் அடைந்துள்ளன என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
 இந்திய விமானப்படைத் தாக்குதலையும், துல்லியத் தாக்குதலையும், மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரங்களில் தொடர்புபடுத்தி பேசக் கூடாது என்றார் அவர்.
 தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜேட்லி பேசியதாவது:
 ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்களில் இடம்பெறக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 1971-இல் பாகிஸ்தானுடன் போர் நடந்தபோது, மொத்த எதிர்க்கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக நின்றன. அப்போது, ஜனசங்கத்தின் தலைவராக இருந்த வாஜ்பாய், அரசின் ஒவ்வொரு முடிவையும் ஆதரித்தார்.
 ஆனால், அண்மையில் நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், இந்திய விமானப்படை பாலாகோட்டில் நடத்திய தாக்குதல் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டின.
 21 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை, நாட்டு நலனை கடுமையாகப் பாதித்துவிட்டது. இந்தியாவை பாகிஸ்தான் இகழ்வதற்கான வாய்ப்பாக அது அமைந்துவிட்டது. ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களின் மனதில் சந்தேகங்களை கிளப்பும் வகையில் சுயலாபத்துக்காக கேள்வி எழுப்புகின்றனர். இதைச் செய்வதன் மூலமாக தன்னைத்தானே அவர்கள் சுட்டுக் கொள்கின்றனர்.
 ஒசாமா பின்லேடன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, அவர்களது நடவடிக்கைகள் குறித்து யாரும் கேள்விகளை எழுப்பவில்லை. அதுகுறித்து ஆதாரங்களையும் கேட்கவில்லை.
 பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: பயங்கரவாதத்தை நீங்கள் (பாக்.) தொடர்ந்து ஊக்கப்படுத்தினால், அதற்கான பெரும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல என்பது உங்களுக்கு புரிய வரும். அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT