இந்தியா

சரத்பவார், மாயாவதி போட்டியிடாதது பாஜக கூட்டணிக்கு சாதகம்: சிவசேனை கருத்து

DIN


தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக சிவசேனை தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கூட்டணியின் வாக்கு வங்கியை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கவர்ந்து வருவதால், மாயாவதி அச்சமடைந்துவிட்டார் எனவும் சிவசேனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெள்ளிக்கிழமை வெளியான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சரத்பவாரை அடுத்து, மாயாவதியும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதன்மூலம் தெரியவரும் முக்கியக் கருத்து, அவர்கள் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பதே. மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்பதற்கு அவர்கள் பாதை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதால், தேர்தலில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியானது உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே உள்ளது. தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட அச்சப்பட்டு, அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்க சரத்பவார் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், இதற்கு அவரது குடும்ப உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் ஒத்துழைக்காத காரணத்தினால், அவரும் தேர்தல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 
தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சித் சிங் மோஹித் பாடீல், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளது, அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது தேசியவாத காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.
காங்கிரஸைக் கண்டு அச்சம்: கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தலித் மக்களும், யாதவ இன மக்களும் பெருவாரியாக மோடிக்கு வாக்களித்தனர். 
இதனால், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து, அக்கட்சித் தலைவர் மாயாவதி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஆனால், தற்போது பாஜகவை விட காங்கிரஸைக் கண்டே அவர் அதிக அச்சமடைந்து உள்ளார். 
பிரியங்காவின் பயணத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கூட்டணியின் வாக்கு வங்கியை அவர் கவர்ந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் மாயாவதி உள்ளார். 
இதன் காரணமாகவே அவர் தேர்தலில் போட்டியிடாமல் விலகி உள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT