இந்தியா

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: அப்ரூவராக மாற இடைத்தரகர் ராஜீவ் சக்ஸேனாவுக்கு நீதிமன்றம் அனுமதி 

DIN

புது தில்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் அப்ரூவராக மாற விரும்பிய இடைத்தரகர் ராஜீவ் சக்ஸேனாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், அதிமுக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து  ரூ.3,600 கோடியில் சொகுசு  ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைப் பெற இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு  அந்த நிறுவனம் ரூ.400 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிஷெல் உள்ளிட்ட 3 இடைத்தரகர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதனிடையே, இடைத்தரகர் மிஷெல் கடந்த டிசம்பர் மாதம் துபையிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, நீதிமன்ற காவலில் அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, துபையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் சக்ஸேனாவும் நாடு கடத்தி வரப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கில் அப்ரூவராக மாறி சாட்சியம் அளிப்பதாக, தில்லி பெருநகர நீதிமன்றத்தில் சக்ஸேனா கடந்த சில தினங்களுக்கு முன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "வழக்கின் தற்போதைய நிலையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, நேர்மையான முறையில் வாக்குமூலம் அளிப்பதுதான் சரியான வழி என்று முடிவு செய்துள்ளேன்' என்று சக்ஸேனா குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அவர்,  மாஜிஸ்திரேட் முன்னிலையில் இம்மாதம் 2-ஆம் தேதி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, நீதிமன்றத்தில் புதிய கோரிக்கை ஒன்றை சனிக்கிழமை சக்ஸேனா முன்வைத்தார். அதில், தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், 6-ஆம் தேதி வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி சமர் விஷால், அன்றைய தினம் கண்டிப்பாக வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி இடைத்தரகர் ராஜீவ் சக்ஸேனாவின் வாக்குமூலம் 6-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் நீதிபதி சமர் விஷால் முன்னிலையில்  பதிவு செய்யப்பட்டது.

அவர் தனியாக தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவரது வாக்குமூலத்தை அமலாக்கத்துறை முழுமையாக படித்த பிறகு தன்னுடைய தரப்பு மனு தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இதையடுத்து இந்த வழக்கு 25-ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து, அவரது ஜாமீனையும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அப்ரூவராக மாற விரும்பிய இடைத்தரகர் ராஜீவ் சக்ஸேனாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  

திங்களன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT