இந்தியா

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாஜக செல்வாக்கு அதிகரிப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்

IANS


புல்வாமா தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் பாலாகோட் இந்திய விமானப் படை தாக்குதல் அரசியலாக்கப்படுவதாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே போர் நிலவி வந்தது. ஆனால், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாஜகவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.     
 
கருத்துக் கணிப்புகளின் படி, 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவைத் தேர்தலில் சுமார் 322 தொகுதிகளை கைப்பற்றும் என்று நிலைமை இருந்தது. அதுவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் 237 தொகுதிகளாக சரிந்தது.  

இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு, இடைக்கால பட்ஜெட் தாக்கலில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கும் திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் போன்ற அறிவிப்புகள் பாஜகவின் செல்வாக்கை சற்று உயர்த்தியது. ஜனவரி மாதம் 237 தொகுதிகளாக இருந்த பாஜகவின் செல்வாக்கு பிப்ரவரி மாதம் இதுபோன்ற அறிவிப்புகளுக்கு பிறகு 256 ஆக அதிகரித்தது. 

அதன்பிறகு, பிப்ரவரி மாதம் நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. இதை வைத்து பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமரிசனங்களை முன் வைத்தன. அதற்கேற்றார் போல் புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளுக்கு பிறகு பாஜகவின் செல்வாக்கு மீண்டும் அதிகரித்தது. பிப்ரவரி மாதம் 256 தொகுதிகளாக இருந்த பாஜகவின் செல்வாக்கு மார்ச் மாதம் 274 தொகுதிகளாக அதிகரித்தது. இதன்மூலம், மக்களவைக்கு தேவையான பெரும்பான்மை இடங்களான 272-ஐ பாஜக அடைந்தது.  

டைம்ஸ் நௌவ் - விஎம்ஆர் கருத்துக் கணிப்பு:

டைம்ஸ் நௌவ் - விஎம்ஆர் கருத்துக் கணிப்பு தகவலை எடுத்துக்கொண்டால், ஜனவரி மாத நிலவரப்படி பாஜக 252 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக இருந்தது. அதுவே, பிப்ரவரி மாதம் 18 தொகுதிகள் அதிகரித்து 270 தொகுதிகள் ஆனது. இந்த காலகட்டத்தில் தான், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, நடுத்தர வர்கத்தினருக்கு பயனளிக்கும் வகையில் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டாம் போன்ற அறிவிப்புகள் வெளியானது.

அதன்பிறகு, மார்ச் மாதம் கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது. இது புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் பாலாகோட்டில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு பிறகு நடத்தப்படும் முதல் கருத்து கணிப்பு. இந்த கருத்துக் கணிப்பில் பாஜகவின் செல்வாக்கு மேலும் உயர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளையும் தாண்டி 283 தொகுதிகளானது. 

ஏபிபி-சி கருத்துக் கணிப்பு:

ஏபிபி-சி கருத்துக் கணிப்புகளும் இடஒதுக்கீடு அறிவிப்பு, இடைக்கால பட்ஜெட் தாக்கல், புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியான சம்பவங்கள் உள்ளிட்டவைக்கு பிறகு பாஜகவின் செல்வாக்கு 233 தொகுதிகளில் இருந்து 264 தொகுதிகளுக்கு அதிகரித்ததாக கூறுகிறது. இந்த கருத்து கணிப்பு பிப்ரவரி மாதம் நடத்தப்படவில்லை.

இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு:            

இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பின்படி பாஜக செல்வாக்கில் பெரிய அளவிலான மாற்றம் ஏதுமில்லை. கடந்த டிசம்பர் மாதம் 281 ஆக இருந்த பாஜகவின் செல்வாக்கு மார்ச் மாதம் 285 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியா டுடே-கார்வி கருத்துக் கணிப்பு:

இந்தியா டுடே-கார்வி, புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு கருத்துக் கணிப்பை நடத்தவில்லை. ஆனால், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 281 தொகுதிகளாக இருந்த பாஜகவின் செல்வாக்கு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 237 தொகுதிகளாக குறைந்துள்ளது.  

இதில், மார்ச் மாதத்துக்கு 5 கருத்துக் கணிப்பு தகவல்கள் உள்ளது. ஆனால், பிப்ரவரி மாதத்துக்கு 2 கருத்து கணிப்பு தான் உள்ளது. அதனால், சரியான ஒப்பீடுகளை மேற்கொள்வது சிக்கலாக இருந்தது. எனினும் கருத்துக் கணிப்புகளில் மாற்றம் இருந்தாலும், இடைக்கால பட்ஜெட் தாக்கல், 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு, புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சம்பவங்களுக்கு பிறகு பாஜகவின் செல்வாக்கு அதிகரித்திருப்பது கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT