இந்தியா

துரியோதனனுடன் மோடியை ஒப்பிட்டு பிரியங்கா காந்தி விமர்சனம்

DIN


துரியோதனனுடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம், அம்பாலா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா பேசியபோது, தமது தந்தை ராஜீவ் காந்தியை நம்பர் ஒன் ஊழல்வாதி என்று மோடி விமர்சித்திருந்ததற்கு பதிலடி கொடுத்தார். மேலும், மகாபாரத கதாபாத்திரமான துரியோதனனுடன் மோடியை அவர் ஒப்பிட்டார். அப்போது பிரியங்கா பேசியதாவது:
தலைக்கனம், ஆணவம் ஆகியவற்றை நமது நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். வரலாறும்,  மகாபாரதமும் இதற்கு சாட்சி. துரியோதனனும் மிகுந்த ஆணவத்துடன் இருந்தார். 
அவரைத் திருந்தச் செய்ய பகவான் கிருஷ்ணர் முயற்சி செய்தார். ஆனால் கிருஷ்ணரையே துரியோதனன் சிறைப்பிடித்தார்.  
பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருந்தால், மக்களவைத் தேர்தலை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாயிகள், பெண்கள் விவகாரங்களை முன்வைத்துப் போட்டியிட வேண்டும் என சவால் விடுக்கிறேன். மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த பணிகள் குறித்தும், எதிர்காலத்துக்கான தமது திட்டம் குறித்தும் அவர் தெரிவிக்க வேண்டும்.
நாட்டின் பிரதமராக மோடி உள்ளார். பாஜகவின் மிகப்பெரிய தலைவராகவும் இருக்கிறார். இதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், மோடிக்கு நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். 
மக்களவைத் தேர்தலானது, பாஜக தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்தே நடைபெறுகிறது. ஆனால் தங்களது தோல்விகளை மறைப்பதற்கு, மக்களின் கவனத்தை பாஜகவினர்  திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.
நமது நாட்டு மக்கள், மிகவும் அறிவாளிகள். அவர்களை மோடியால் தவறாக வழிநடத்த முடியாது. பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்யும்போதெல்லாம், மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. 
ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை ஏன் செயல்படுத்தவில்லை என்பது குறித்தும் அவர்கள் தெரிவிப்பதில்லை. இதற்குப் பதிலாக, பிற பிரச்னைகளை பாஜக தலைவர்கள் எழுப்புகின்றனர். சில நேரம், யானை கடந்த 70 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கின்றனர். 
சில நேரம், தியாகிகள் பெயரில் வாக்குகள் கோருகின்றனர். அதேபோல், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்துள்ள எனது குடும்பத்தினரையும் பாஜக தலைவர்கள் அவமதிக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலானது, ஒரு குடும்பம் சம்பந்தப்பட்டது கிடையாது. பிரதமராலும், மத்திய அரசாலும் முழுவதும் சிதறடிக்கப்பட்ட கோடிக்கணக்கான குடும்பங்களின் கனவுகள், விருப்பங்கள் தொடர்புடையது இந்த மக்களவைத் தேர்தல் என்றார் பிரியங்கா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT