இந்தியா

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை நீட்டிப்பு

DIN


இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு (எல்டிடிஇ) விதிக்கப்பட்ட தடை,  மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு இந்தியா முழுவதும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. 
அதன் பிறகு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தமிழகத்தின் சென்னை, நீலகிரி, தில்லி உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த தீர்ப்பாயம், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சரியே என தீர்ப்பளித்தது. 
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.  கடந்த 2014, மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை, 2019,  மே 13 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், இந்தத் தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு (2024, மே மாதம் வரை) நீட்டித்து, அரசிதழில் அறிவிக்கையாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்-1967இன் 3-ஆவது பிரிவின் ஒன்று  மற்றும் மூன்றாவது துணைப் பிரிவுகளின்கீழ், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) குந்தக செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளன. 
மேலும், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோல்விக்கு இந்திய அரசுதான் பொறுப்பு என்று கூறி, இணையதள கட்டுரைகள் மூலம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வை பரப்பும் செயலில் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 
இதுபோன்ற பிரசாரம்,  இந்தியாவில் உள்ள மிக மிக முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதனால், அந்த இயக்கத்துக்கான தடையை நீட்டிப்பது அவசியமாகிறது என உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT