இந்தியா

காவலர் முதல் காக்கி கால்சட்டை வரை: தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வார்த்தை மோதல்கள்

DIN

தேர்தல் பிரசாரம் என்றாலே, பரபரப்பான குற்றச்சாட்டுகளுக்கும், வசை மொழிகளுக்கும் பஞ்சம் இருக்காது. கட்சியின் செயல்பாடுகள், கொள்கைகளை விமர்சிப்பதைத் தாண்டி, தனி நபர் விமர்சனங்களும், வார்த்தை வரம்பு மீறல்களும் தேர்தல் களத்தை சூடாக்கவே செய்கின்றன. அந்த வகையில் இந்த மக்களவைத் தேர்தல் இவை எதற்கும் பஞ்சம் இல்லாததாகவே அமைந்தது. ஒரு சில பிரசாரங்கள் நகைச்சுவையை ஏற்படுத்துவதாக இருந்தாலும், பெரும்பாலான பிரசார பேச்சுகள் அரசியலை தரம் தாழ்த்துவதாகவே இருந்தன.
பிரதமர் மோடி தன்னை தேசத்தின் காவலர் என்று முன்னிறுத்தி பிரசாரம் செய்தபோது, ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்து,  காவலரே திருடர் என்ற விமர்சனத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸூக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் "நானும் ஒரு காவலன்' என்ற பிரசாரத்தை பாஜக முன்னெடுத்தது.
போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குரின் பேச்சு இந்தத் தேர்தலில் அதிக விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளானது. முதலில், "மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில், என்னை துன்புறுத்திய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே, நான் சபித்த காரணத்தால்தான் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தார்' என்று பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தனக்கும் பங்கு இருப்பதாகவும், அதற்காக பெருமிதம் கொள்வதாகவும் பிரக்யா கூறியது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இறுதியாக, நாதுராம் கோட்சே ஒரு "தேச பக்தர்' என்று பேசி கடும் கண்டனத்துக்கு உள்ளானார். இதற்கு பிரதமர் மோடியும் கடும் கண்டனம் தெரிவித்தார். பிரக்யாவின் பேச்சை தான் ஒருபோதும் மன்னிக்க  மாட்டேன் என்று மோடி கூறினார்.
பிரக்யாவை அடுத்து இந்தத் தேர்தலில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளானவர் சமாஜவாதி மூத்த தலைவர் ஆஸம் கான். பல ஆண்டுகளாக சமாஜவாதி கட்சியில் இருந்த ஜெயப்ரதா, அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதனை மோசமாக விமர்சித்த ஆஸம் கான், "ஜெயப்ரதா காக்கி கால்சட்டை (ஆர்எஸ்எஸ் சீருடை) அணிந்துவிட்டார்' என்று குறிப்பிட்டு கண்டனத்துக்கு உள்ளானார். இதற்காக 72 மணி நேரம் பிரசாரத்தில் ஈடுபட அவருக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. இத்துடன் நிற்காமல், ஜெயப்பிரதாவை தவறான நடத்தை உள்ள பெண் என்று அர்த்தம் வரும் வகையிலும் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த ஜெயப்ரதா, "ஆஸம் கான் எக்ஸ்-ரே கண் உடையவர். கூட்டணிக் கட்சித் தலைவரான மாயாவதி அவருடைய பார்வையில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்று பேசியது பிரசாரத்தை மேலும் தரம் தாழ்த்தியது.
பிரதமர் மோடியின் பேச்சுகளும் சர்ச்சையில் சிக்காமல் இல்லை. தேர்தல் பிரசாரத்தில் ராகுலை விமர்சித்துப் பேசியபோது,  "உங்கள் தந்தையை (ராஜீவ் காந்தி) அவரால் அமைக்கப்பட்ட நீதிமன்றம் வேண்டுமானால் குற்றமற்றவர் என்று கூறலாம். ஆனால், உண்மையில் அவர், "ஊழலில் முதலிடம் பெற்றவர்' என்ற பெயருடன்தான் மரணமடைந்தார்' என்று மோடி குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ராகுல், "உங்கள் கர்மா உங்களுக்காகக் காத்திருக்கிறது. எனது தந்தை குறித்து நீங்கள் எவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது உங்களுக்கு ஒருபோதும் கைகொடுக்காது. எனது ஆழ்ந்த அன்பும், அரவணைப்பும் உங்களுக்கு உண்டு' என்றார்.
மோடியும் கடும் விமர்சனங்களில் இருந்து தப்பவில்லை. "தனது அரசியல் லாபங்களுக்காகவே மனைவியை மோடி கைவிட்டார்; பாஜகவைச் சேர்ந்த பெண்கள், தங்களது கணவர் பிரதமர் மோடிக்கு அருகில் சென்றாலே பயப்படுகிறார்கள். பிரதமர் மோடியை போல தங்களது கணவரும் தங்களைக் கைவிட்டு விடுவார் என்று பாஜக பெண்கள் அச்சப்படுகிறார்கள்' என்று மாயாவதி விமர்சித்தார். "நவீன உலகின் ஒளரங்கசீப் மோடி' என்று காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறினார். "மோடியை தான் முன்பு ஒருமுறை தரம் தாழ்ந்தவர் என்று விமர்சித்ததை இந்தத் தேர்தல் பிரசாரத்திலும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் நினைவுகூர்ந்தார்.
முஸ்லிம்களை ஆதரித்துப் பேசியதற்காக, காங்கிரûஸ பச்சை வைரஸ் தாக்கியுள்ளது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதற்காக 72 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய அவருக்கு தடைவிதிக்கப்பட்டது. இதுபோல இன்னும் பல வசைகளும், மோசமான சொல்லாடல்களும் நிறைந்ததாக 17-ஆவது மக்களவைத் தேர்தல் பிரசாரம் 
அமைந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT