இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: பதர்வா நகரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பதர்வா பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அந்த பகுதியில் 4 நாள்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை தளர்த்தப்பட்டது.
தோடா மாவட்டத்தின் பதர்வா பகுதியில்  கச்சி நல்தி கிராமத்தைச் சேர்ந்த  நயீம் அகமது ஷா என்பவர் சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பசு வதை தடுப்பு என்ற பெயரில் இக்கொலை நடைபெற்றதாக ஊடகங்களில் தகவல் வெளியானதால் பதற்றமான நிலை ஏற்பட்டது. 
இந்நிலையில், நயீம் ஷா கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பதர்வா பகுதியில் வன்முறை வெடித்தது. கல் வீசித் தாக்குதல் நடத்தும் போராட்டக்காரர்களால் பல வாகனங்கள் சேதமடைந்தன. அதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, கடந்த வியாழக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. அந்த பகுதியில் தொடர்ந்து 4 நாள்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை தளர்த்தப்பட்டது.
இதுதொடர்பாக பதர்வா வட்டாட்சியர் தாஹிர் கூறியதாவது: பதர்வா பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு முதலில் சுமார் ஒன்றரை மணி நேரம் தளர்த்தப்பட்டது. அந்த நேரத்தில் எவ்வித அசம்பாவித சம்பங்களும் ஏற்படாத காரணத்தால், 2 மணி நேரம் கூடுதலாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், வழக்கம்போல கடைகளும், வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டன. ஏடிஎம் மையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வாங்கும் இடங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
மாயமான ஆசிரியரின் சடலம் மீட்பு..: இதனிடையே, பந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் முஷ்டாக் அகமது லோனியை, கடந்த வாரம் முதல் காணவில்லை என்று அனைவரும் தேடி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள ஏரியில் அவரது உடல் சடலமாக திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. 
ஊலர் ஏரியில் சடலம் மிதப்பதை கண்ட கிராம மக்கள், இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து,  காவல் துறையினர், தடயவியல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 
சடலத்தை ஆய்வு செய்ததில், அது மாயமான ஆசிரியர் அகமது லோனி என்று தெரிய வந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT