இந்தியா

தகவல் பொருத்தமின்மை: உ.பி.யில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித் தொகை தாமதம்

DIN


உத்தரப் பிரதேசத்தில், தகவல் பொருத்தமின்மை காரணமாக 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி கிடைப்பது தாமதமாகி உள்ளதாக அந்த மாநில வேளாண்துறை அமைச்சர் சூர்ய பிரதாப் சாஹி கூறினார். 
பயனாளிகள் குறித்த தரவுகள் பொருந்தாத வகையில் இருப்பதால், அவை சரிசெய்யப்பட்டு விரைவில் அவர்களுக்கான நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
இதுகுறித்து லக்னெளவில் அமைச்சர் சூர்ய பிரதாப் சாஹி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்காக அமல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களே மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை தேடித்தந்ததில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 
விவசாயிகளுக்கான பிரதமர் நிதியுதவித் திட்டத்துக்காக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1.56 கோடி விவசாயிகள் குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தோம். அதில் 1.11 கோடி விவசாயிகள் தங்களின் முதல் தவணையை பெற்றுள்ளனர். நாடு முழுவதுமாக சுமார் 3 கோடி விவசாயிகள் முதல் தவணை பெற்றுள்ளனர். 
சில விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி கிடைக்கப்பெறவில்லை என்று வதந்திகள் வலம் வருகின்றன. உண்மையில், சுமார் 1.5 லட்சம் விவசாயிகள் குறித்த தரவுகள் பொருந்தாத வகையில் உள்ளன. அவை சரிசெய்யப்பட்டு அவர்களின் கணக்குகளில் நிதியுதவி சேர்க்கப்படும். அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில், விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர். சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், விவசாயிகள் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவதற்காக மோடி அரசு பணியாற்றி வருகிறது என்று அமைச்சர் சூர்ய பிரதாப் சாஹி கூறினார். 
2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் வகையில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், அது 3 தவணையாக அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் தனது முந்தைய ஆட்சியில் மோடி அரசு அறிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT