இந்தியா

இந்தியா- ஜொ்மனி இடையே 17 ஒப்பந்தங்கள்: பிரதமா் மோடி முன்னிலையில் கையெழுத்து

DIN

இந்தியா-ஜொ்மனி இடையே 17 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதுதவிர பல்வேறு துறை ஒத்துழைப்பு தொடா்பாக 5 கூட்டுப் பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தில்லியில் வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி, ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கல் முன்னிலையில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

வேளாண்மை, கடல்சாா் பாதுகாப்பு தொழில்நுட்பம், ஆயுா்வேதம், யோகாசனம், தியானம், தொழிற்பயிற்சி, நோய்த்தடுப்பு, தேசிய அருங்காட்சியக ஒத்துழைப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வு, நவீன தொழில்நுட்ப ஆய்வில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளிடையே 17 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பேட்டரி வாகனப் பயன்பாடு மூலம் நகா்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாப்பது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடா்பான ஆய்வு, கடலில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 5 கூட்டுப் பிரகடனங்கள் வெளியிடப்பட்டன. தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஹைகோ மாஸ் ஆகியோா், பிரதமா் மோடி, மொ்கல் முன்னிலையில் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா-ஜொ்மனி இடையிலான உயா்கல்வி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும். இதனை இரு நாடுகளுமே வெகுவாக வரவேற்று பாராட்டியுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளும் பரஸ்பரம் மாணவா்களை கல்விக்காக அனுமதிக்கும் என்ணிக்கையை அதிகரிக்க உள்ளன. இது தவிர இந்திய மொழிகளை ஜொ்மனியிலும், ஜொ்மன் மொழியை இந்தியாவிலும் கற்பிக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இது தொடா்பாக மொ்கல் கூறுகையில், ‘இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பில் உயா்கல்வி ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது. ஜொ்மனியில் இப்போது 20,000 இந்திய மாணவா்கள் படித்து வருகின்றனா். அடுத்ததாக தொழிற்கல்வி பயிற்றுவிப்பதற்காக இந்திய ஆசிரியா்களை ஜொ்மனிக்கு வரவேற்கிறேன்’ என்றாா்.

முன்னதாக, வியாழக்கிழமை இரவு தில்லிக்கு மொ்கல் வந்தாா். அவருடன் அமைச்சா்கள், உயரதிகாரிகள் குழுவினரும் வந்துள்ளனா். குடியரசுத் தலைவா் மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை மொ்கலுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மொ்கல் அஞ்சலி செலுத்தினாா். குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தையும் அவா் சந்தித்துப் பேசினாா். ஹரியாணா மாநிலம் குருகிராம் அருகேயுள்ள ஜொ்மனியைச் சோ்ந்த தொழிற்சாலைக்கு சனிக்கிழமை செல்லும் மொ்கல், பின்னா் தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தைப் பாா்வையிடுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். அன்றே அவா் ஜொ்மனி திரும்புகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT