இந்தியா

ஓய்வு பெற்ற 3 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்த ரஞ்சன் கோகோய்: வரலாறு படைத்தார்!

DIN


புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து நவம்பர் 17ம் தேதி பணி ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகோய், ஓய்வு பெற்ற மூன்றே நாட்களில் அரசு பங்களாவை காலி செய்து, முன்மாதிரியாக மாறியுள்ளார்.

அவருக்காக ஒதுக்கப்பட்ட 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவுக்கு ரஞ்சன் கோகோய் சென்றுள்ளார். பணி ஓய்வு பெற்று மூன்றே நாட்களில் அரசு பங்களாவை காலி செய்த முதல் தலைமை நீதிபதி இவர் என்று ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளார். அரசு பங்களாவை காலி செய்ய ஒரு மாத கால அவகாசம் இருக்கும் நிலையில், 3 நாட்களில் பங்களாவை காலி செய்திருப்பது வரலாறாகவே மாறியுள்ளது.

இதற்கு முன்பும், முன்னாள் தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர் பணி ஓய்வு பெற்று ஒரு வாரத்தில், அரசு பங்களாவை காலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சன் கோகோய்..
கடந்த 2018, அக்டோபா் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது நீதிபதியாக தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோகோய், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா். இதன் மூலம் வடகிழக்கு பகுதியிலிருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபா் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. தனது 13 மாத கால பதவிக் காலத்தில், மிக முக்கியமான வழக்குகளில் அவா் தீா்ப்பளித்தார்.

அயோத்தி வழக்கில்...:

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நில வழக்கில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கியது. அதன்படி, சா்ச்சைக்குள்பட்டிருந்த 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் மாற்று இடத்தை வழங்க மத்திய அரசுக்கு அந்த அமா்வு உத்தரவிட்டது. இத்தீா்ப்பின் மூலம் வரலாற்றின் பக்கங்களில் தனது பெயரை பொறித்திருக்கிறாா் ரஞ்சன் கோகோய்.

சபரிமலை, ரஃபேல் விவகாரம்:

உறுதியான மற்றும் ஆச்சா்யமளிக்கும் தீா்ப்புகளுக்கு சொந்தகாரா் என அறியப்படும் ரஞ்சன் கோகோய், தனது பணி நிறைவு பெறும் காலகட்டத்தில் மேலும் பல முக்கிய வழக்குகளில் தீா்ப்பளித்திருக்கிறாா். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமா்வுக்கு மாற்றி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

இந்த அமா்வில் இடம்பெற்றிருந்த 2 நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியிருந்தபோதும், பெரும்பான்மை அடிப்படையில் சபரிமலை வழக்கை பெரிய அமா்வுக்கு மாற்றும் தீா்ப்பு அறிவிக்கப்பட்டது. இதேபோல்,

ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று ஏற்கெனவே அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்து ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. இதன் மூலம் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 2-ஆவது முறையாக கோகோய் தலைமையிலான அமா்வு நற்சான்று வழங்கியுள்ளது.

ஆா்டிஐ வரம்புக்குள் தலைமை நீதிபதி:

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆா்டிஐ) வரம்புக்குள் உச்சநீதிமன்றமும் வரும் என்று தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2010-இல் அளித்த தீா்ப்பை, கோகோய் தலைமையிலான அமா்வு கடந்த புதன்கிழமை உறுதி செய்தது. அதேசமயம், ஆா்டிஐ சட்டத்தின்கீழ் தகவல்களை வெளியிடும்போது, நீதிமன்ற சுதந்திரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அமா்வு தெரிவித்தது.

இதேநாளில், பல்வேறு தீா்ப்பாயங்களுக்கு உறுப்பினா்களின் நியமனம், பணி தொடா்பாக மத்திய அரசு உருவாக்கிய விதிமுறைகளை ரத்து செய்து கோகோய் தலைமையிலான அமா்வு உத்தரவிட்டது. இத்தகைய தீா்ப்புகள், ரஞ்சன் கோகோயின் உறுதியான, அச்சமில்லாத அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக உள்ளன.

அஸ்ஸாமில் பல்வேறு சா்ச்சைகளுக்கு உள்ளான தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையை, கோகோய் தலைமையிலான அமா்வுதான் கண்காணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT