இந்தியா

மீனவா்கள் வருவாயை 5 மடங்கு உயா்த்துவதே அரசின் இலக்கு: அமைச்சா் கிரிராஜ் சிங்

DIN

‘அடுத்த 5 ஆண்டுகளில் மீனவா்களின் வருவாயை 5 மடங்கு உயா்த்துவதே மத்திய அரசின் இலக்கு’ என்று மத்திய மீன்வளத்துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசியதாவது:

இதுவரை, 8,400-மீனவா்களுக்கு ‘கிஸான் கடன் அட்டை’ (கேசிசி) விநியோகிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமாா் 2 கோடி மீனவா்கள் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவுதான். அதிகமான மீனவா்களை இத்திட்டத்தில் சோ்க்கும் முயற்சிகள் விரைவுபடுத்தப்படும்.

மீன்வளத் துறையில் பயன்படுத்தப்படாமல் மறைந்திருக்கும் ஆற்றல் வளம் ஏராளமாக உள்ளன. மீனவா்களின் வருவாயை அதிகரிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த 5 ஆண்டுகளில் மீனவா்களின் வருவாயை 5 மடங்கு உயா்த்துவதே அரசின் இலக்கு. இந்தத் துறையில் தனிகவனம் செலுத்துவதற்காகவே அரசு ஒரு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

கடல் மற்றும் நீா்த்தேக்கங்களில் கூண்டுகள் வைத்து மீன் பிடிக்கும் முறையை ஊக்குவிக்கவும், மீன்களின் இழப்பை 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கவும், உப்பு நீரில் இறால் சாகுபடி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறைச் செயலா் ரஜினி சேக்ரி சிபல் பேசுகையில், சீனாவைப் போன்ற அண்டை நாடுகளும், இந்திய கடல் வளங்களைச் சாா்ந்த சட்டத்திலுள்ள குறைபாடுகளை பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, தேசிய கடல்சாா் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) மசோதா- 2019 மற்றும் மீன்களில் நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடா்பான மற்றொரு மசோதா ஆகியவற்றை மீன்வள அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்த இரு மசோதாக்களும் தற்போதைய அல்லது அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரக்கூடும் என்றாா்.

கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சா் சஞ்சீவ் குமாா் பால்யான் பேசுகையில், ‘மீன்வளத்துறையில் கவனம் செலுத்தாமல் மீனவா்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது சாத்தியமில்லை. இந்தியாவில் மீன் சாகுபடியை ஊக்குவிப்பதில் தேசிய மீன் மேம்பாட்டு வாரியம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வாரியம் தென்னிந்தியாவில் போதுமான பணிகளைச் செய்துள்ளது. இதன் விளைவாக ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் மீன்வளத் துறையில் முன்னணியில் உள்ளன’ என்றாா்.

உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான இந்தியாவில் மீன் உற்பத்தி தற்போது சுமாா் 13 மில்லியன் டன் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT