சரத் பவார் தலைமையிலான என்சிபி எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு அஜித் பவார் வருகை?
மகாராஷ்டிரத்தில் நிகழும் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களில் தற்போது என்சிபி தலைவர் சரத் பவார் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 50 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் நிகழும் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களில் தற்போது என்சிபி தலைவர் சரத் பவார் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 50 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சட்டப்பேரவை குழுத் தலைவர் அஜித் பவார் ஆதரவு அளிக்க தேவேந்திர ஃபட்னவீஸ் இன்று (சனிக்கிழமை) காலை மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேசமயம், அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அஜித் பவாரின் இந்த திடீர் முடிவால் மகாராஷ்டிர அரசியலில் இன்று திருப்பங்களுக்கு எல்லாம் திருப்பமாக மிகப் பெரிய அரசியல் திருப்பம் ஏற்பட்டது.
மேலும் அவருடன் 10 - 11 என்சிபி எம்எல்ஏ-க்களும் மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என விளக்கமளித்திருந்தார். அதேசமயம், என்சிபி எம்எல்ஏ-க்களின் கையெழுத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாகவும் என்சிபி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், என்சிபியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, சரத் பவார் என்சிபி எம்எல்ஏ-க்களை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இதன்படி, சரத் பவார் தலைமையில் என்சிபி எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் என்சிபியைச் சேர்ந்த 42 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுதவிர மற்ற 9 என்சிபி எம்எல்ஏ-க்கள் தனி விமானம் மூலம் தில்லிக்கு விரைந்துள்ளனர். எனவே, அஜித் பவார் முடிவுக்கு ஆதரவாக 9 என்சிபி எம்எல்ஏ-க்கள் இருப்பதும், சரத் பவாருக்கு ஆதரவாக 42 என்சிபி எம்எல்ஏ-க்கள் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், இதிலும் திருப்பம் ஏற்படும் வகையில் சிவசேனை தலைவர்கள் மிலிந்த் நார்வேகர் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பாபாசாகேப் பாட்டீல் மற்றும் சஞ்சய் பான்சன் ஆகிய இரண்டு என்சிபி எம்எல்ஏ-க்களை மும்பை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்துள்ளனர். இவர்கள் அஜித் பவாருடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தனி விமானம் மூலம் தில்லி விரைந்த 9 எம்எல்ஏ-க்களில் இவர்கள் பெயர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, சரத் பவார் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் மொத்தம் 50 என்சிபி எம்எல்ஏ-க்கள் பங்கேற்றிருப்பதாக என்சிபியின் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர அஜித் பவார் உட்பட மற்ற 4 என்சிபி எம்எல்ஏ-க்கள் வரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், என்சிபி எம்எல்ஏ-க்களின் ஆதரவாக அஜித் பவார் ஆளுநரிடம் தெரிவித்திருப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஒரு இரவிலேயே அரசியல் திருப்பம் ஏற்பட்டு வருவதால், அம்மாநில அரசியலிலும் டிடிவி தினகரன் பாணியில் 'ஸ்லீப்பர் செல்' போன்ற சொற்கள் அரங்கேறினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.