மகா திருப்பம்: தனி விமானம் மூலம் தில்லிக்கு விரைந்த என்சிபி அதிருப்தி எம்எல்ஏ-க்கள்!
மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படும் என்சிபி அதிருப்தி எம்எல்ஏ-க்களில் 9 பேர் தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படும் என்சிபி அதிருப்தி எம்எல்ஏ-க்களில் 9 பேர் தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சட்டப்பேரவைத் தலைவர் அஜித் பவார் ஆதரவு அளிக்க தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். அஜித் பவாருடன் 10 - 11 என்சிபி எம்எல்ஏ-க்களும் மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என விளக்கமளித்திருந்தார். அஜித் பவாரின் இந்த திடீர் முடிவால் மகாராஷ்டிர அரசியலில் இன்று மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படும் என்சிபி அதிருப்தி எம்எல்ஏ-க்களில் 9 பேர் தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அரசியலில் பொதுவாக இதுபோன்ற சூழல்கள் நிலவும்போது குதிரைப் பேரத்தைத் தவிர்ப்பதற்காக அரசியல் கட்சிகள் கூவத்தூர் ஃபார்முலாவைப் பின்பற்றுவது வழக்கம். அந்த வகையில், என்சிபி அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தற்போது தில்லிக்குச் சென்றுள்ளனர். முன்னதாக, அவர்கள் குஜராத்தில் தங்கவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால், அவர்களை குஜராத்துக்கு பிறகு அனுப்ப முடிவு செய்திருப்பதாக நம்பகத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் காங்கிரஸ் மற்றும் சிவசேனை எம்எல்ஏ-க்களும் வேறு மாநிலத்தில் தங்கவைக்கப்பட திட்டமிடப்பட்டு வருகின்றனர். சிவசேனை எம்எல்ஏ-க்கள் ஜெய்ப்பூரிலும், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் போபாலிலும் தங்கவைக்கப்படவுள்ளனர்.
தில்லிக்கு விரைந்துள்ள என்சிபி அதிருப்தி எம்எல்ஏ-க்கள்:
தௌலத் தரோடா, நர்ஹாரி ஸிர்வார், சுனில் புசாரா, திலிப் பங்கர், அனில் பாட்டீல், நிதின் பவார், சுனில் ஷெல்கே, பாபாசாகேப் பாட்டீல் மற்றும் சஞ்சய் பான்சன்.