அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசை காட்டும் அஜித்: வேறு ஹோட்டலுக்கு மாற்றப்படும் என்சிபி எம்எல்ஏ-க்கள்!
மகாராஷ்டிரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், என்சிபி எம்எல்ஏ-க்கள் ஹயாத் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், என்சிபி எம்எல்ஏ-க்கள் ஹயாத் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராவகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றதையடுத்து, அம்மாநில அரசியல் களம் பரபரப்பின் உச்சத்துக்கே சென்றது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் நேற்று (சனிக்கிழமை) மாலை எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித் பவார் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து, காங்கிரஸ், சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களது எம்எல்ஏ-க்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தியது. குதிரைப் பேரத்தைத் தவிர்க்க தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 46 எம்எல்ஏ-க்கள் ரினைசன்ஸ் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அக்கட்சியின் தலைவர் சரத் பவார் இன்றும் எம்எல்ஏ-க்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரவும் உடனிருந்தார்.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில்,
"அமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி அஜித் பவார் தங்களை தொடர்பு கொள்ள முயன்றதாக எம்எல்ஏ-க்கள் சிலர் சரத் பவாரிடம் தெரிவித்துள்ளனர். ரினைசன்ஸ் ஹோட்டலில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்றனர்.
இந்நிலையில், ரினைசன்ஸ் ஹோட்டலில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மும்பை விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஹயாத் ஹோட்டலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
சரத் பவாருக்கு ஆதரவாக மொத்தம் 50 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருப்பதாக அக்கட்சியின் முக்கியத் தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது தங்களது கட்டுப்பாட்டில் 46 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்த அவர் மற்ற 4 எம்எல்ஏ-க்கள் பாஜகவின் வசம் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், அவர்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.