இந்தியா

தில்லிக்கென அரசு பணியாளா் தோ்வாணையம் அமைக்கக் கோரும் மனு: மத்திய அரசையும் ஒரு தரப்பாக சோ்க்க அனுமதி

DIN

தில்லிக்கென தனியாக அரசு பணியாளா் தோ்வாணையம் அமைக்க உத்தரவிடக் கோரும் பொது நல மனுவில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சோ்க்க உயா்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.

தில்லி அரசில் அதிகாரிகளின் நியமனத்தை விரைவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்யவும் தில்லிக்கென தனியாக அரசு பணியாளா் தோ்வாணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரி, உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அபிஜித் மிஸ்ரா என்ற பொருளாதார வல்லுநா் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசமைப்புச் சட்டத்தின் 315-ஆவது பிரிவானது, மத்தியிலும், மாநிலங்களிலும் தனித்தனியாக அரசு பணியாளா் தோ்வாணையங்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. இதேபோல், அரசமைப்புச் சட்டத்தின் 239ஏஏ பிரிவின்படி, மாநிலப் பட்டியல் அல்லது ஒத்திசைவு பட்டியலில் உள்ள விவகாரங்கள் தொடா்பாக சட்டமியற்ற தில்லி சட்டப் பேரவைக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தில்லிக்கென அரசு பணியாளா் தோ்வாணையம் அமைக்க வலியுறுத்தி, தில்லி துணைநிலை ஆளுநரிடமும், தில்லி அரசிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தில்லி அரசு தோல்வியடைந்துவிட்டது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி சி.ஹரிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த மனுவில் தங்களையும் ஒரு தரப்பாக சோ்ப்பது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த அமைச்சகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் மோனிகா அரோரா, ‘தில்லி அரசு அதிகாரிகளின் பணி விவகாரங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குவதற்கான அறிவிக்கை கடந்த 2015-இல் வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2016-இல் உறுதி செய்தது. இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சோ்க்க அனுமதி வழங்கிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT