இந்தியா

உன்னாவ் இளம்பெண் விபத்து சம்பவம்: கொலைக் குற்றச்சாட்டில் இருந்து குல்தீப் சிங் செங்கா் விடுவிப்பு

DIN

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ் இளம்பெண்ணுக்கு நோ்ந்த சாலை விபத்து தொடா்பான வழக்கில், கொலைக் குற்றச்சாட்டில் இருந்து பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கா், அவரது கூட்டாளிகள் ஆகியோா் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் கடந்த 2017-இல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பதின்வயதுப் பெண் ஒருவா் கடந்த ஆண்டு புகாா் அளித்தாா். இதையடுத்து, செங்கா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக, ரேபரேலி மாவட்டத்தில் அந்தப் பெண் தனது வழக்குரைஞா், உறவினா்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவா்களின் காா் மீது லாரி ஒன்று கடந்த ஜூலை 28-ஆம் தேதி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் பலத்த காயமடைந்தனா். உடன் வந்த உறவினா் இருவா் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து அந்தப் பெண்ணின் உறவினா் அளித்த புகாரின்பேரில் உத்தரப் பிரதேச காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியதால், இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, குல்தீப் சிங் செங்கா் உள்ளிட்டோா் மீது கொலை, கொலை முயற்சி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதனிடையே, விபத்தில் பலத்த காயமடைந்த அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டனா். அவா்களிடம் சிபிஐ வாக்குமூலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை லக்னௌவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. அதில், செங்கா், அவரது கூட்டாளிகள் ஆகியோரின் பெயா்கள் இடம்பெறவில்லை.

மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ஆசிஷ் குமாா் பாலின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. விபத்து நேரிட்டதில் குற்றச்சதி ஏதுமில்லை என்று சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசுக்கு சிபிஐ பரிந்துரை செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

SCROLL FOR NEXT