இந்தியா

கட்சியில் செல்வாக்கை இழக்கிறாரா ப.சிதம்பரம்?

DIN


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதன்மூலம், ப.சிதம்பரம் அடுத்த 14 நாட்கள் திகார் சிறையில் அடைக்கபடவுள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் ப. சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து, சிதம்பரத்தை சிக்கல்கள் சூழத் தொடங்கியது. மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு, சிபிஐ காவல் அடுத்தடுத்து நீட்டிப்பு, இடைக்கால ஜாமீன் மனு நிராகரிப்பு, இதே விவகாரத்தில் அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமீன் நிராகரிப்பு என அடுத்தடுத்து சட்டரீதியான சரிவுகளைச் சந்தித்து வந்தார் சிதம்பரம். இந்த தொடர் சரிவு, தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் எவ்வளவோ மன்றாடியும் திகார் சிறை செல்வதைத் தவிர்க்க முடியாமல் போனதில் வந்து முடிந்துள்ளது.

சட்ட ரீதியாக சரிவுகளைச் சந்தித்து வரும் சிதம்பரம், அரசியலிலும் செல்வாக்கை இழந்து வருகிறாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. தில்லி உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த பிறகு, சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை அவரது வீட்டுச் சுவர் ஏறி குதித்து அதிரடியான முறையில் கைது செய்தனர். முன்னாள் மத்திய உள்துறை அமைச்சராகவும், முன்னாள் மத்திய நிதியமைச்சராகவும் இருந்த, கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயார் செய்த மூத்த தலைவர் என கட்சியின் ஆட்சியிலும், கட்சியிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த தலைவரின் கைதுக்கு காங்கிரஸ் தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதுகுறித்து டிவீட் செய்யும் வரை கட்சித் மேலிடத்தில் இருந்து சிதம்பரம் கைது குறித்து எந்த கருத்தும் வெளிவரவில்லை.

மேலும் படிக்க: உள்துறை அமைச்சர் முதல் திஹார் சிறை வரை..! - ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் பயணம்..


இதேபோல், கர்நாடக மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு கருப்புப் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அழைப்பாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் 4 முறை அமலாக்கத் துறை முன் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில், அவர் கடந்த 3-ஆம் தேதி இரவு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

சிவகுமார் கைதுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அமலாக்கத் துறை அலுவலகம் முன் கூடி கோஷம் எழுப்பினர். இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து கர்நாடக மாநிலத்தில் ஒரு நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையானப் போராட்டத்தைத் நடத்தினார். பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ராமநகரம், கனகபுரம் ஹாசன் கோலார் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தன. தில்லியில் இளைஞர் காங்கிரஸாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.

 

மங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டரை கைது செய்யும் போலீஸார்.


சிவகுமார் கைதுக்கான எதிர்வினையை ஒப்பிடுகையில், சிதம்பரம் கைதுக்கு இதுபோன்ற எதிர்வினைகள் எதுவும் காங்கிரஸ் தரப்பில் இருந்து எழவில்லை. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிதம்பரத்துக்கு சட்டம் கைகொடுக்காத நிலையில், கட்சியும் அவருக்கான ஆதரவுக் குரலை எழுப்பாமல் இருப்பது கட்சியில் அவர் செல்வாக்கை இழக்கிறாரா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. சிதம்பரத்தையும், சிவகுமாரையும் பிரித்துப் பார்க்கிறதா காங்கிரஸ்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT