இந்தியா

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தரச்சான்று கட்டாயமாக்க வேண்டும்: ராம்விலாஸ் பாஸ்வான்

DIN


தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற கோரிக்கைக்கு தீபாவளிக்கு முன்பாகவே மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
இந்தியாவில் தங்க நகைகளுக்கான தேவை அதிகம் என்பதால், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து ஆண்டொன்றுக்கு சராசரியாக 700 டன் முதல்  800 டன் தங்கம் வரை இந்தியா இறக்குமதி செய்கிறது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் தங்கமும், அணிகலன்களாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தங்கமும் தரமானதாக இருக்க வேண்டும். தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் தரச்சான்று அளிப்பதற்காக, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (பிஐஎஸ்) செயல்பட்டு வருகிறது.
முக்கியமாக, தரமற்ற தங்க நகைகளை வாங்குவதில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும்; தரமான நகைகளை நகைக் கடைகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் ஆகிய காரணங்களுக்காக தரச்சான்று அளிக்கப்படுகிறது. 14 காரட், 18 காரட், 22 காரட் ஆகிய மூன்று அளவீடுகளில் தரச்சான்று அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் 800 தரச்சான்று அளிக்கும் மையங்கள் இயங்கி வருகின்றன. எனினும், 40 சதவீத தங்க நகைகள் மட்டும் ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், தரச்சான்றுகள் அளிப்பதை அமல்படுத்துவது தொடர்பாக, பிஐஎஸ் நிறுவனம், நீதி ஆயோக், வர்த்தகம் மற்றும் 14 துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அண்மையில் கூடி விவாதித்தனர். அப்போது, தங்க நகைகளுக்கு தரச்சான்று அளிப்பதை கட்டாயமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வியாழக்கிழமை கூறியதாவது: நகைக்கடைகள் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதை கட்டாயமாக்கக் கோரி மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்திருக்கிறோம். பொதுமக்களின் நலன் கருதி வரும் தீபாவளிக்கு முன்பாகவே எங்கள் கோரிக்கைக்கு வர்த்தகத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT