மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் ஐஐடி மாணவர்கள் 50 பேர் இணைந்து, புதிய மின்சார வாகனத்தை வடிவமைத்துள்ளனர். வாகன மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாக அவர்கள் இதனை உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து கரக்பூர் ஐஐடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கரக்பூர் ஐஐடி மாணவர்கள் வடிவமைத்த புதிய பசுமை வாகனத்துக்கு டெஸ்லா என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது புழக்கத்திலிருக்கும் மூன்று சக்கர ஆட்டோக்கள் மற்றும் அதிக பராமரிப்பு தேவைப்படும் இ-ரிக்ஷாக்களுக்கு கடும் போட்டியாக டெஸ்லா இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய மின்சார வாகனத்தை வடிவமைத்த குழுவுக்கு தலைவராகச் செயல்பட்ட இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் விக்ராந்த் ராச்செர்லா கூறியதாவது:
ஏற்கெனவே இருக்கும் வாகனத்தை மறுசீரமைப்பு செய்வதற்குப் பதிலாக, புதிதாக ஒன்றை உருவாக்க நினைத்தோம். ஏனெனில், மின்சார வாகனத்துக்கு வடிவமைப்பு என்பது மிக முக்கியமானது. வாகன பாகங்களின் ஒவ்வொரு வடிவமைப்பும், உள்வாங்கப்பட்டு, பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டவை. உண்மையான தயாரிப்பு வெளிவருவதற்கு முன்பு சுழற்சி முறையில் பல்வேறு சோதனைகளுக்கு இந்த வாகனம் உட்படுத்தப்பட்டது.
டெஸ்லா மின்சார வாகனம், அதிசக்தி வாய்ந்த மோட்டார், 6-7 ஆண்டுகள் நீடித்து உழைக்கக்கூடிய லீத்தியம் அயர்ன் பேட்டரிகள், அதிக பாரத்தைத் தாங்கவல்ல வலிமையுள்ள சட்டகம் உள்ளிட்டவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.