இந்தியா

வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரதுல் புரியின் நீதிமன்றக் காவல் அக்.3 வரை நீட்டிப்பு

DIN


வங்கிக் கடன் மோசடி வழக்கில், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ரதுல் புரியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து, தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் இருந்து மோசர்பேர் நிறுவனத்துக்காக, ரதுல் புரியும், அவரது குடும்பத்தினரும் ரூ.354 கோடி கடன் வாங்கினர். ஆனால், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று வங்கி நிர்வாகம் சார்பில் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், ரதுல் புரி, அவரது தந்தையும், மோசர் பேர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான தீபக் புரி, ரதுல் புரியின் தாயாரும், கமல்நாத்தின் சகோதரியுமான நீதா புரி உள்பட 5 பேருக்கு எதிராக சிபிஐ கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், ரதுல் புரிக்கு எதிராக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது.
இதைத்தொடர்ந்து, ரதுல் புரியை கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி கைது செய்த அமலாக்கத் துறையினர், அவரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அதன்பின்னர், அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்து, சிறப்பு நீதிபதி சஞ்சய் கார்க் முன் வெள்ளிக்கிழமை ரதுல் புரி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ரதுல் புரியை ஜாமீனில் விடுவித்தால், வழக்கில் தொடர்புடைய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கு விசாரணையையும் எதிர்கொண்டு வரும் ரதுல் புரி, அந்த வழக்கில் ஏற்கெனவே நீதிமன்ற காவலில் உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT