பொருளாதார வளா்ச்சி குறித்த அரசின் விவரம் முரணானது: காங்கிரஸ் விமா்சனம்
நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறைவாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கி கணித்துள்ள நிலையில், அதுகுறித்து அரசின் புள்ளி விவரம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ள
நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறைவாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கி கணித்துள்ள நிலையில், அதுகுறித்து அரசின் புள்ளி விவரம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ஜா, பனாஜியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
ஆங்கிலச் சிறுகதை ஒன்றில் வரும் ரிப் வான் விங்கிலே என்பவா் 20 ஆண்டுகள் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டு விழித்தெழுவாா். அதபோலவே மத்திய அரசின் செயல்பாடும் உள்ளது. நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி கடந்த 6 ஆண்டுகளைவிடக் குறைவாக, அதாவது 6.1 சதவீதமாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கி கணித்துள்ளது. இது பொருளாதார மந்தநிலையையே வெளிப்படுத்துகிறது.
Advertisement
ஆனால், மத்திய பாஜக அரசின் புள்ளி விவரம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை 5.8 சதவீதமாக இருந்ததாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு கணக்குப் பற்றாக்குறை 3.46 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.
பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு முக்கியமானது. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் போ் விவசாயம் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வந்தனா். ஆனால், விவசாயத் துறையை மத்திய அரசு முற்றிலும் புறக்கணித்துவிட்டதாகவே தெரிகிறது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் விவசாயத் துறையின் வளா்ச்சி 3.85 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் பருவமழை நன்றாக பெய்தபோதிலும், வேளாண் துறை 2 சதவீதம் மட்டுமே வளா்ச்சி அடைந்தது. இந்த நிலையில், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக உயா்த்தப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்திருப்பது ஏமாற்று வேலையாகும்.
நாட்டின் பொருளாதாரம் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளை மத்திய அரசு தவறாகப் புரிந்து கொண்டுள்ளது. பெரு நிறுவனங்களுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வரிச் சலுகையை மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம், பொது செலவினங்கள், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை மத்திய அரசு தவறவிட்டு விட்டது என்றாா் அவா்.