முகப்பு
இந்தியா

கரோனா நோயாளிகள் குறித்த தகவல்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பப்படுவது ஏன்?: காங்கிரஸ் ஆவேசம்

கேரளத்தில் உள்ள கரோனா நோயாளிகள் குறித்த தகவல்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பப்படுவது ஏன்? என்று மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

Updated On : 10 ஏப்ரல், 2020 at 6:46 PM
ரமேஷ் சென்னிதாலா
பகிர்:

திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ள கரோனா நோயாளிகள் குறித்த தகவல்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பப்படுவது ஏன்? என்று மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 6771 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 228 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில் கேரளத்தில் உள்ள கரோனா நோயாளிகள் குறித்த தகவல்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பப்படுவது ஏன்? என்று மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக கேரள சட்டபேரவை எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரளாவில் கரோனா பாதிப்புள்ள நோயாளிகள் குறித்த தகவல்களானது  வார்டு வாரியாக அரசால் சேகரிக்கப்பட்டு, அமெரிக்காவில் உள்ள மார்கெட்டிங்  நிறுவனமான ஸ்ப்ரிங்லரின் சர்வர்களுக்கு அனுப்பப்படுகிறது.  

இத்தகைய தகவல் பரிமாற்றங்களை உலகின் பெரும்பாலான நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால் நமது நாட்டிலேயே இத்தகைய தகவல்களை ஆராய்வதற்கு என்று புகழ்பெற்ற நிறுவனங்கள் இருக்கும் நிலையில், ஏன் அரசே அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு அனுப்புகிறது என்பதுதான் சந்தேகமாக உள்ளது. அந்த நிறுவனமானது கேரள அரசு முத்திரையைக் கூட பயன்படுத்துகிறது.  இது எல்லாமே நமது மக்களின் ஆரோக்கியம் தொடர்புடைய முக்கிய தகவல்களாகும்.

ஏன் இதெல்லாம் நடைபெறுகிறது? இதன்மூலம் பண ஆதாயம் பெறுவது யார்? இவை குறித்தெல்லாம் தெளிவான விளக்கம் அளிக்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.