முகப்பு
தற்போதைய செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

தஞ்சாவூரில் திங்கள்கிழமை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருவது குறித்து...

Updated On : 27 ஏப்ரல் 2026, 9:32 am IST
தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் - டிஎன்எஸ்
பகிர்:

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் திங்கள்கிழமை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இந்த விழாவின் 15-ஆம் திருநாளான திங்கள்கிழமை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

Advertisement

Advertisement

ஒன்றன் பின் ஒன்றாக மேல வீதியில் உள்ள தேர் மண்டபப் பகுதியை அடைந்தனர். பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரில் ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் தனி தனி சப்பரங்களில் எழுந்தருளினர்.

பின்னா், காலை 6.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் விமூர்த்தானந்தா சுவாமி, தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வேல் முருகன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிவகனங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் தியாகராஜா - பெருவுடையாரே என்ற பக்தி கோஷத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் 19 அடி உயரமும் - 18 அடி அகலமும், 40 டன்‌ எடையும் கொண்டது. அலங்காரம் செய்யப்பட்டு பிறகு 50 அடி உயரமும் - 43 டன் எடையுடன்‌ காணப்படும். தேரில் 252 சிற்பங்கள் மற்றும் 165 வெங்கல மணிகள் உள்ளன.

தொடா்ந்து, பக்தா்கள் வசதிக்காகவும், தேரில் வரும் சுவாமிக்கு தேங்காய், பழம் படைப்பதற்காகவும் மேல வீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரா் கோயில், மூலை ஆஞ்சனேயா் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையாா் கோயில், இரத்தினபுரீஸ்வரா் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகா்ணிகேஸ்வரா் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையாா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், காளியம்மன் கோயில் என மொத்தம் 14 இடங்களில் திருத்தோ் நின்று வருகின்றது. ஒவ்வொரு இடத்திலும் ஏறத்தாழ 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த விழா காரணமாக நான்கு வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

தேருக்கு முன்னால் கோலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டத்துடன் ஆடி அசைந்து ராஜ வீதிகளில் உலா வரும் தேரினை தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

இதேபோல, தம்பை, உடும்பா, கொம்பு வாத்தியங்கள் முழங்கப்பட்டன. இதனால், 4 வீதிகளிலும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

தேர் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடுமையான வெயில் காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அன்னதானம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேல வீதி தேரடியில் இருந்து புறப்படும் தோ், மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக நிலையைச் சென்றடையவுள்ளது. மாலையில் தோ் மண்டபத்திலிருந்து ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் புறப்பட்டு, கோயிலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

summary

Grand Chariot Festival at the Big Temple in Thanjavur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.