இந்தியா

ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் மாநில முதல்வர்கள் கோரிக்கை

ANI

புது தில்லி: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநில முதல்வர்கள்  வலியுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில், மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி துணியை முகக்கவசம் போல் கட்டியிருந்தார். மாநில முதல்வர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்குமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

அதேப்போல பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும், அதே சமயம், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் மட்டும் இயங்க சிறப்பு அனுமதி வழங்கப்பட வேண்டும், உடனடியாக மாநிலங்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் ஊரடங்கை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு விதித்த 21 நாள் ஊரடங்கு வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ஊரடங்கை நீட்டிப்பது தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினார். தற்போதைய சூழலில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது. எனினும், தற்போது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதி மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.

முன்னதாக, நாடாளுமன்ற எதிா்க்கட்சிகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, பெரும்பாலான கட்சிகளும் மாநிலங்களும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதனிடையே, ஊரடங்கை வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஒடிசா அரசும், மே மாதம் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக பஞ்சாப் அரசும் அறிவித்துள்ளன.

கரோனா நோய்த்தொற்று விவகாரம் தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஏற்கெனவே 2 முறை காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT