மும்பை - வாராணசி.. 1,500 கி.மீ. நடந்து சென்ற இளைஞரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
வாராணசி: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இரு சக்கர வாகனத்தில் சென்று மகனை மீட்டு வந்த தாய், மனைவியை மருத்துவமனைக்கு சைக்கிளில் அழைத்துச் சென்ற கணவர் என தங்களது வாழ்நாளில் மறக்கவே முடியாத பயணங்களை மேற்கொண்டோரைப் பற்றி நாம் நிறையவே பார்த்துக் கொண்டு வருகிறோம்.
அந்த வகையில், மும்பையில் உள்ள உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர், ஊரடங்கு உத்தரவால் வேலை இல்லாமல், வீட்டுக்குச் செல்ல போக்குவரத்து வசதியும் இல்லாமல் சுமார் 1,500 கி.மீ. தொலைவை நடந்தே கடந்துள்ளார்.
Advertisement
தனது வீட்டை அடைந்ததும், குடும்பத்தார் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொள்வார்கள் என்று மகிழ்ச்சியோடு வீட்டு வாயிலில் நின்றிருந்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
கிராமத்தை வந்தடைந்து விட்டேன் என்று குடும்பத்தாருக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தந்த இளைஞரை, அவரது குடும்பத்தார், நேராக வீட்டுக்கோ கிராமத்துக்கோ வர வேண்டாம், மருத்துவமனைக்குச் சென்று கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்திவிட்டனர். உடனடியாக இளைஞரும் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.
மும்பையில் இருந்து வந்திருப்பதால், அவர் தனிமைப்படுத்தப்படுவது அவசியம் என்பதால், வீட்டுக்குள் வர குடும்பத்தார் அனுமதி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.